Agnipath Scheme: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல் திட்டவட்டம்!

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவதால் மற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாவது:

அக்னிபத் என்பது ஒரு தனியான திட்டம் அல்ல. அதை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். 2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை எப்படி பாதுகாப்பாகவும் வலிமையாகவும் மாற்றுவது என்பது தான் அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. அதற்கு பல வழிகளும் பல படிகளும் தேவை.

போரில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நாம் தொடர்பு இல்லாத, கண்ணுக்கு தெரியாத போரைச் நோக்கிச் செல்கிறோம். தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. நாளைக்காக நாம் தயாராக வேண்டும் என்றால், நாம் மாற வேண்டும். அக்னி வீரர்களால் ஒரு முழு ராணுவத்தை உருவாக்க முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் திறன் பயிற்சிகளை பெறுவார்கள்.

நாட்டின் பாதுகாப்பு என்பது மாறக்கூடியது. அது நிலையானதாக இருக்க முடியாது. அது நமது தேசிய நலன் மற்றும் தேசிய சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய சூழலுடன் தொடர்புடையது. அதற்கு உபகரணங்கள் தேவை, கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளக் கொள்கைகளில் மாற்றம் தேவை. அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.