தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை.. இனி அதிகமான காப்பரை இறக்குமதி செய்ய வேண்டுமா?

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா, தூத்துக்குடியில் கடந்த 1997-ல் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடங்கி, கடந்த 21 ஆண்டாக இயங்கி வந்தது.

ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் உற்பத்தித்திறனுடைய இந்த ஆலை, உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக இருந்தது. கடந்த 15 ஆண்டுக்கும் மேலான சட்டப் போரட்டம், மக்கள் போராட்டமும் இணைந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த ஒரு தொழில் குழுமத்தின், உலகின் மிகப் பெரிய ஆலையை இழுத்து மூட வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த ஆலைக்கு எதிரான மக்கள் போரட்டத்தின் 100-வது நாளான கடந்த 2018, மே 22-ல் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து 26-ம் தேதி ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்தியாவின் தாமிரத் தேவை மற்றும் ஏற்றுமதியில் 40% ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்துவந்தது. அத்துடன், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாகவும் விளங்கியது. இதன் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,500 கோடி கருவூல நிதியாக நம் நாட்டுக்கு வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது.

இது போக, தூத்துக்குடி துறைமுக வருவாயில் 12 சதவிகிதத்தையும், சல்பியூரிக் ஆசிட் தேவையைப் பூர்த்தி செய்வதில் 95% கொண்ட முக்கிய நிறுவனமாகவும் ஸ்டெர்லைட் ஆலை இருந்தது.

தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவில் தாமிர உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக இருந்தவை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும், பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ ஆலைகளும்தான்.

நாளிதழ்களில் அளிக்கப்பட்ட விற்பனை விளம்பரம்

இதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், தேவையைவிட உற்பத்தி குறைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் நேரடியாக 5,000 பேரும், மறைமுகமாக 12,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றுவந்தனர். இது தவிர, 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். ஆலையை நம்பி தினசரி 800 முதல் 1,000 லாரிகள் வரை இயங்கி வந்தன.

தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த சரக்கு கையாளுதலில் 20 – 25% ஸ்டெர்லைட் ஆலைக்கான காப்பர் சான்ட்தான். ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டிற்கு சுமார் 25 லட்சம் டன் காப்பர் சான்ட் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு செலுத்தப்படும் வரிகளின் மொத்த மதிப்பு ரூ.1,400 கோடி. கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் இந்தியாவின் காப்பர் ஏற்றமதி 419 கிலோ டன்னாக இருந்த நிலையில், தற்போது 2022-ம் நிதியாண்டில் 87 கிலோ டன்னாக குறைந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

இதே போல, 2018-ம் நிதியாண்டில் 215 கிலோ டன்னாக இருந்த காப்பர் இறக்குமதி 2022-ம் நிதியாண்டில் 241 கிலோ டன்னாக அதிகரித்துள்ளது. காப்பர் இறக்குமதி செய்வதன் மூலமாக 2022-ம் நிதியாண்டில் மட்டும் 1.2 பில்லியன் ரூபாய் நாட்டுக்கு அந்நியச் செலாவணி செலவு ஏற்பட்டுள்ளது.

தற்சமயம், ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவின் காப்பர் தேவை 1.1 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், உலக அளவில் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் சந்தையில் காப்பரின் விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 9,000-ஐ எட்டியுள்ளதால், இந்தியாவிலிருந்து மேலும் அந்நியச் செலாவணி வெளியேறும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் ஸ்மெல்டர் காம்ப்ளக்ஸ், சல்பியூரிக் தொழிற்சாலை, காப்பர் ரீஃபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், ஆசிட் பிளான்ட், ஆர்.ஓ யூனிட்டுகள் உள்ளிட்ட 10 பகுதிகளை விற்பனை செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் அளித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள், வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆலையில் தொழிலாளர்களும், ஆலை மூலம் வேலை வாய்ப்பு பெற்றுவந்தவர்களும் மீண்டும் ஒருமுறை விற்பனை முடிவினை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், நாட்டின் தாமிரத் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் பின்னடைவினை ஏற்படுத்தும்” என தொழில் துறை வல்லுநர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்.

காப்பர் உற்பத்தியில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஒரு நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளை சரியாகக் கையாளாத காரணத்தினால் தனது ஆலையை விற்பனை செய்ய முன்வந்துள்ளது தொழில் துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இனி இந்த ஆலையை யார் வாங்குவார்கள், ஆலையை வாங்கியபின் எப்படி நடத்துவார்கள், இதனால் என்னென்ன பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.