புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதியில் கள ஆய்விற்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி ரவிகுமார் திவாகருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால், அவர் வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து பரேலிக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து உபியின் பல்வேறு நீதிமன்றங்களின் 610 நீதிபதிகளுக்கும் மாற்றல் உத்தரவு வெளியாகி உள்ளது. இவர்களில், மாவட்டக் கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதிகள் 285, மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் 121 மற்றும் இளநிலை நீதிபதிகள் 213 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதியான ரவிகுமார் திவாகரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இவர், காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்காரக் கவுரி அம்மன் வழக்கில் முக்கிய உத்தரவிட்டவர். இவ்வழக்கில் நீதிபதி ரவிகுமார் இட்ட உத்தரவின் பேரில் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடைபெற்றது. இதில், அங்கு கோயில் இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்ததாக அறிக்கை தாக்கலானது.
இதில், தொழுகைக்கு முன் கைகால்கள் அலம்பி இசு செய்யும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதையடுத்து, நீதிபதி ரவிகுமாருக்கு சில தினங்கள் முன்பாக அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இப்புகாரை பதிவு செய்து வாரணாசி காவல் நிலையத்தார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் நீதிபதி ரவிகுமாருக்கு மாற்றல் உத்தரவு வெளியாகி இருப்பது பாதுகாப்பை அளிக்கும் எனக் கருதப்படுகிறது.