வரும் 23ஆம் தேதியன்று திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என காவல்துறையில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 8 வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளுர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவரது இல்லம் நோக்கி பேரவையை சேர்ந்த ஏராளமானோர் பேரணியாக சென்று முழக்கமிட்டனர்.
சென்னை அடுத்து வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஸ்ரீவாரு மண்டபத்தின் நுழைவு வாயில் முதல் உள்மண்டபம் வரை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்த வழக்கில்,உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும்நீதிமன்றம் எழுப்பிய 26 கேள்விகளுக்கான பதில்களையும் பெஞ்சமின் வழங்கினார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க ஓ.பி.எஸ். முடிவு செய்திருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் மட்டும் பொதுக்குழுவில் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில்,பொதுக்குழுவிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் படை எடுப்போம் என்றும், அதிமுகவின் கட்சி விதிகளுடன் கூடிய சுவரொட்டி, ஓபிஎஸ் வீட்டின் முன்பாக ஒட்டப்பட்டது.
இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என காவல்துறையில் ஓ.பி.எஸ். தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்க கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.