யோகா தனிநபருக்கானது அல்ல: பிரதமர் மோடி பேச்சு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என்றார். இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது, என்று பிரதமர் கூறினார். யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருவதை நாம் காண்கிறோம். இது ஆன்மீக உணர்தல் குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவிவந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை மெருகேற்றியது யோகா என்று அவர் கூறினார்.

“யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தம் அல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் – மனிதகுலத்திற்கான யோகா”, என்று பிரதமர் கூறினார். இந்த கருப்பொருளை உலகளவில் எடுத்துச் சென்றதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்திய முனிவர்களை மேற்கோள் காட்டி பிரதமர், “யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் யோகா நமது சமூகத்திற்கு அமைதியை தருகிறது. யோகா நமது நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவருகிறது. மேலும், யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது.”, என்று கூறினார். மேலும், “இந்த முழுப் பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்துதான் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் ஆன்மாவை நமக்கு உணர்த்துகிறது மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது”, என்று கூறினார்.

யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லாமல், இன்று அது நமது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். யோகா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் இடத்திற்குமானது என்று கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. “நாம் எவ்வளவு மன அழுத்ததில் இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி, நமது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. எனவே, யோகாவை கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும், நாம் யோகாவை வாழ வேண்டும். நாம் யோகத்தை அடைய வேண்டும், யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகாவை வாழத் தொடங்கும் போது, நாம் தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக அல்ல, நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக யோகா மாறும்.” என்று பிரதமர் கூறினார்.

யோகாவுடன் தொடர்புடைய எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேண்டிய தருணம் இன்று, என்று பிரதமர் கூறினார். இன்று நமது இளைஞர்கள் அதிக அளவில் யோகா துறையில் புதிய புதிய சிந்தனைகளுடன் வருகிறார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் யோகா சவால் குறித்தும் அவர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ‘யோகா மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்கான பிரதமர் விருதுகள்’ வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் பங்கேற்ற மைசூர் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2015 முதல், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் “மனிதகுலத்திற்கான யோகா” என்பதாகும். கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது நமது வேதனையைப் போக்க யோகா மனிதகுலத்திற்கு எவ்வாறு சேவை செய்தது என்பதை இந்த ஆண்டு கருப்பொருள் சித்தரிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.