காங்கோவின் விடுதலை நாயகன்: 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட பாட்ரிஸின் பல்

பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கோவின் விடுதலை நாயகன் பாட்ரிஸ் லுமும்பாவின் ‘பல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாட்ரிஸ் லுமும்பா… ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர்.

1925-ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய காங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் பழங்குடி குடும்பத்திற்கு பிறந்தவர்தான் பாட்ரிஸ் லூமம்பா. பெல்ஜியத்திடம் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கோ அடிமைப்பட்டு இருந்த காலக்கட்டம் அது. பாட்ரிஸ் தனது இளம் வயதிலேயே கடின உழைப்பாளியாக இருந்தார். படித்துக்கொண்டே காங்கோவிலிருந்த பெல்ஜிய கம்பெனிகளில் வேலையும் செய்து வந்தார். சிறுவயதிலே பாட்ரிஸுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. அவரது ஆர்வம் அவரை அரசியல் நோக்கியே அழைத்துச் சென்றது.

காங்கோ ஐரோப்பாவின் காலனியாக இருந்ததை பாட்ரிஸ் ஒருபோதும் விரும்பியது இல்லை. காங்கோ விடுபட்டு சுதந்திரமாக, அதேநேரத்தில் ஐரோப்பாவுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனைத்தான் தனது கட்டுரைகளிலும், கவிதைகளிலும் அவர் எழுதி வந்தார்.

பாட்ரிஸ் தனது 20 வயதுக்குப் பிறகுதான் காங்கோவின் விடுதலைக்கான அரசியல் பிரசாரங்களில் ஈடுபட தொடங்கி, அதில் தீவிரமாக ஈடுபட்டார். காங்கோவில் பழங்குடிகள் இனவாதத்தால் பிரிவினைக்கு உள்ளாகி இருப்பதை பாட்ரிஸ் உணர்ந்தார். இந்த இனவாதம்தான் காங்கோவின் சுதந்திரத்திற்கு எதிரியாக இருப்பதை கண்டறிந்து, பொது தேசிய நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலக்கட்டம் என்று பிரசாரத்திலும் ஈடுபட்டார் .

பாட்ரிஸ் அரசியல் வளர்ச்சி அங்கிருந்துத்தான் தொடங்கியது. அதன்பின்னர் காங்கோவின் அரசியல் முகமாக ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் பாட்ரிஸ். பல போராட்டகளுக்கு இடையே 1958-ஆம் ஆண்டு காங்கோ தேசிய இயக்கம் (Congolese national movement) என்ற கட்சியை பாட்ரிஸ் ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்த தேசியவாத முழுக்கம் காரணமாக பெல்ஜியத்தில் கை பணிந்தது. விளைவு… 1960-ஆம் ஆண்டு காங்கோ குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் நாட்டின் பிரதமராக பாட்ரிஸ் லுமும்பா பதவியேற்றார். ஐக்கிய நாடுகள் சபையுடனான உடன்பாட்டில் ஐரோப்ப நாடுகளின் கண்காணிப்பில் காங்கோ இருப்பதை பாட்ரிஸ் எதிர்த்தார்.

மேலும் பெல்ஜியம் – காங்கோ உடன் ஏற்படுத்தப்பட்ட நட்பு உடன்படிக்கையையும் அவர் ரத்து செய்தார். பாட்ரிஸின் இந்த நடவடிக்கை பெல்ஜியத்தை கோபமடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருந்தும் அரசின் சொத்துகளை பாட்ரிஸ் சட்டத்துக்கு புறமாக பயன்படுத்திக்கொண்டார் என்று போலியான குற்றம் சுமத்தப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பெல்ஜியம் இருந்தது. பாட்ரிஸ் கைது செய்யப்பட்டார்.

1961-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கோ பாதுகாப்புப் படையால் பாட்ரிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளர்கள் அத்துடன் நிற்கவில்லை. பாட்ரிஸ் மரணத்திற்கு தடயம் இருக்கக் கூடாது என்று கருதி அவரது உடலை கூறாக்கி அமிலத்தில் கரைத்தனர். அவர் உடலில் மீதமிருந்த தங்கப் பல், பெல்ஜியம் வசம் இருந்து வந்தது.

வரலாற்றில் பாட்ரிஸ் லுமும்பாவின் மரணம், கொடூரமான மரணமாகவே அறியப்படுகிறது.

61 ஆண்டுகளுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட பல்: பாட்ரிஸின் உடல் உறுப்பில் தங்கத்தினால் ஆன அவரது ஒரே ஒரு பல் மட்டுமே மிச்சம் இருந்தது. அதனை திங்கட்கிழமை பெல்ஜிய அரசு, அரசு மரியாதையுடன் பாட்ரிஸின் குடும்பத்தாரிடம் ஒப்படைந்தது.

நிகழ்வில் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூ பேசும்போது, “பாட்ரிஸ் கொலைக்கு தார்மிகமாக பொறுப்பேற்கிறேன். இது மிகவும் வலி மிகுந்தது. மறுக்க முடியாத உண்மை. இவை நிச்சயம் பேசப்பட வேண்டும். ஒருவர் தனது அரசியல் நம்பிக்கைகளுக்காகவும், வார்த்தைகளுக்காகவும், சிந்தனைகளுக்காகவும் கொல்லப்பட்டார்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பாட்ரிஸ் குடும்பத்தினர் கூறும்போது, ”அவரது இறுதிச் சடங்குகளை இனியாவது நாங்கள் முடிப்போம்” என்று தெரிவித்தனர்.

ஆப்பிரிக்க விடுதலை வரலாற்றில் பாட்ரிஸ் லுமும்பா பெயர் அழுத்தமாக நிலைத்துவிட்டது. அதற்கான உதாரணங்களை காங்கோவின் முக்கிய வீதிகளில் நாம் காணலாம். காங்கோவின் இளம் தலைமுறை மூலம் சுரண்டலுக்கு எதிராக பாட்ரிஸின் குரல் தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.