பழநி: அமைச்சருக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்; போலீஸார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு! – நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சி உட்பட 3 ஊராட்சிகள் பா.ஜ.க வசம் இருக்கின்றன. இதில் புஷ்பத்தூர் ஊராட்சியின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த செல்வராணி மகுடீஸ்வரன் இருக்கிறார். இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள் வரும் புஷ்பத்தூர் ஊராட்சியில் தலைவரை செயல்பட முடியாத வகையில் தி.மு.க-வினர் செயல்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

பாஜக ஆர்ப்பாட்டம்

குறிப்பாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில், காரணமின்றி ஊராட்சிமன்றத் தலைவருக்கான காசோலை அதிகாரத்தை முடக்கிவைத்து, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்கவிடாமல் செய்தல், புதிய ஒப்பந்தங்களை தி.மு.க-வினருக்கு மட்டுமே வழங்குமாறு கட்டாயப்படுத்துவது என தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தி.மு.க அரசையும், உணவுத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலாளருமான அர.சக்கரபாணியைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அப்போது புஷ்பத்தூர் ஊராட்சியின் தலைவர்மீதான குறைகள் என்ன… எதனால் அவரின் செக் பவர் பறிக்கப்பட்டது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பா.ஜ.க-வினர் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் திடீரென நுழைய முயன்றனர். அவர்களை நுழைய முடியாதபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பேரி கார்டுகளையும், பூட்டப்பட்டிருந்த அலுவலக கதவுகளைத் தாண்டியும், சுவறில் ஏறி குதித்தும் ஒன்றிய அலுவலகத்துக்குள் பா.ஜ.க-வினர் நுழைந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அலுவலக வளாகத்துக்குள் மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் கைது நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

ஆர்ப்பாட்டம்

இது குறித்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் கனகராஜிடம் பேசினோம். “அமைச்சர் அர.சக்கரபாணியின் தூண்டுதலால், பா.ஜ.க, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களை செயல்படவிடாமல் தி.மு.க-வினர் தடுக்கின்றனர். அரசு அதிகாரிகளோ பணியிடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தங்கள் மீது நடக்கலாம் எனப் பயந்து அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகின்றனர். இன்றும்கூட வட்டார வளர்ச்சி அலுவலர் தகுந்த விளக்கத்தை அளித்திருந்தால் தடுப்பைத் தாண்டி அலுவலக வளாகத்துக்குள் சென்றிருக்க மாட்டோம். ஆனால் அவர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரே எனப் பயந்து பேசக்கூட இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.