‘அவன் கவனிக்க மாட்டான்’.. 90 வயதிலும் பனை ஏறி பதநீர் இறக்கும் தாத்தா..! நம்பிக்கை மனிதரின் மறுபக்கம்..!

பெற்ற மகன் கவனிக்காமல் கைவிட்டு மும்பை சென்று விட்ட நிலையில் நெல்லையை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் , இந்த வயதிலும் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது மனைவியை காப்பாற்றி வருகின்றார். படிக்கவில்லையே என்று கண்ணீர் சிந்தும் நம்பிக்கை மனிதரின் மறுபக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

வயதோ 90… கண்ணில் கண்ணாடி இல்லை… கூன் போட்டு நடந்தாலும்… எவரிடமும் கும்பிடு போட்டு பிழைக்கவில்லை..! மன தைரியத்துடன் கற்பக விரூட்சமான பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கி உழைத்து வருகிறார்..!

நெல்லை அருகே முனைஞ்சிபட்டி அடுத்த காரியாண்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 12 வயதில் இவரது உறவினர் ஒருவர் கையில் பாளை அருவாளை கொடுத்து பனை மரம் ஏற்றிவிட, கடந்த 78 வருடத்தில் மும்பை, கேரளா என மாநிலம் விட்டு மாநிலம் சென்று பனைத்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி உள்ளார்

இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் பனை மரத்தில் ஏறி பக்குவமாக பாளையை அரிவாளால் சீவி, பத நீர் இறக்கி உழைக்கும் பெரியவர் துரைப்பாண்டிக்கு, தன்நம்பிக்கை இருந்தாலும் அவரது மகன் கைவிட்டுச் சென்று விட்டதால் மனதில் உள்ள வலி அவரது கண்களில் கண்ணீராய் வெளிப்படுகிறது.

இந்த பதனீரை விற்று அதில் கிடைக்கும் காசில் தான் தானும் மனைவியும் அரிசி வாங்கி சாப்பிடுவதாக தெரிவிக்கும் பெரியவர் துரைப்பாண்டிக்கு, மனதில் வலி இருந்தாலும், இன்னமும் கையில் அரிவாள் பிடிக்க தெம்பும், மன உறுதியும் அதிகமாகவே இருக்கிறது.

பெரியவர் துரைப்பாண்டியை பார்க்கும் போது வயதானவர் கஷ்டபடுகிறாரே ? என்று தோன்றினாலும், உழைத்து பழகியவர்கள் எளிதில் சோர்ந்து போவதில்லை என்பதற்கு சாட்சியாய் காட்சி அளிக்கும் அவருக்கு, தன்னால் பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லையே என்ற வேதனை மனதுக்குள் உள்ளது..!

இந்த நம்பிக்கை பெரியவரின் மனவலியை உணர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, அவருக்கும் அவரது மனைவிக்கும், அண்மையில் முதியோர் உதவித் தொகை கிடைப்பதற்கான உத்தரவை அதிகாரிகளை அனுப்பி வீடுதேடிச்சென்று வழங்கி உள்ளார்.

 

திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே மனைவியை பிரிந்து செல்லும் இளைஞர்களும், தாய் தகப்பனை தவிக்க விட்டுச்செல்லும் பிள்ளைகளும் துரைப்பாண்டி போன்ற பெரியவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றுதான், குடும்பத்தில் ஆயிரம் மனவேதனைகள் இருந்தாலும் அவற்றை மறந்து தன்னை நம்பி வந்தவர்களை காலம் முழுவதும் காத்து , கவனித்துக் கொள்வதே அந்த ஆணுக்கும், ஆண்மைக்கும் அழகு ..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.