தேர்வு முடிவுகள்.. 5 மாணவர்கள் தற்கொலை.. மனநல டாக்டர் கூறுவது என்ன..?

தமிழகத்தில் நேற்று வெளியான 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், 5 மாணவ – மாணவியர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘முன்பெல்லாம் மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாணவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

வகுப்பு நேரம் போக, மற்ற நேரங்களில் சமூக வலைதளங்களில் மூழ்குகின்றனர். அருகில் உள்ள உறவுகளிடம் பேசாமல், எங்கோ முகம் தெரியாத ஒருவரிடம் சாட் செய்து பேசுகின்றனர். எதிர்முனையில் உள்ளவர்களின் வழிகாட்டுதலை வேதவாக்காக எண்ணுகின்றனர். இதுதான் கடந்த காலங்களில் ‘ப்ளு வேல்’ என்ற பெயரில் உலகை உலுக்கியது.

மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மட்டுமல்ல, ஆசிரியர்கள், நண்பர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு ரிசல்ட் பார்க்க தெரியவில்லை. ரிசல்ட்டை முழுமையாக உள்வாங்காமல், அந்த கண விநாடியில் தோன்றுவதை, அதாவது குறைவான மதிப்பெண், தேர்ச்சியை தோல்வி என எண்ணுவது போன்ற காரணிகளும் இதில் அடங்கும்.

முதலில், தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது, பெற்றோர் தன் குழந்தைகளுகளிடம் எப்படி பேசுவது என சொல்லித் தர வேண்டியது அவசியமாகிறது. வெப் சீரியஸ், யூ டியூப் சேனல்கள் போன்றவற்றுக்கு சென்சார் அவசியமாகிறது’ என்றனர்.

இது குறித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனநல மருத்துவர் மணிகண்டன் கூறியதாவது; “பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் போது வாழ்வின் நிறை, குறைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, புத்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லித் தர வேண்டும். அதிகம் படிக்காமல் வாழ்வில் வெற்றி பெற்ற முதல்வர்கள், திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற சாதனையாளர்களை உதாரணப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் 14 வயதுக்கு மேல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். அப்போது பெற்றோர், குழந்தைகள் எதிரில் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக செல்லமும், அதிக கண்டிப்பும் கூடாது. கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அப்படி வாங்கிக் கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித் தரவேண்டும். அப்போதுதான் தோல்வி பழகும்” என்று அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறுகையில், “மாணவர்களுக்கு நீதி வகுப்புகள் நடத்துவதை கண்காணிக்கவும், தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்று கற்றுத் தரவும், தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆண்கள் உடல் உறுதியிலும், பெண்கள் மன உறுதியிலும் பலமானவர்கள் என்கிறது மனோதத்துவம். தற்போதைய நடைமுறை வாழ்வில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கின்றனர். இந்தியாவில் இப்படி நான்கு நிமிடத்துக்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது என்கிறது புள்ளி விவரம்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.