மேகதாது அணை விவகாரம் ஒன்றிய நீர்வள அமைச்சரை தமிழக குழு இன்று சந்திப்பு: காவிரி ஆணைய தலைவர் முடிவுக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழு இன்று சந்திக்கிறது.தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதில் ஆணையத்தின் நிரந்தர தலைவராக எஸ்.கே.ஹல்தர் இருந்து வருகிறார். இந்நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் போது மேகதாது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை ஆணையத்தின் தலைவர் சமீபத்தில் ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதையடுத்து, கர்நாடகா, தமிழகத்தின் அணைகளை கடந்த 8, 9ம் தேதிகளில் பார்வையிட்ட ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்ல, காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும். அதில் எந்த தவறும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நாளை நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து, அதுதொடர்பான கோரிக்கை மனுவையும் ஒன்றிய அமைச்சரிடம் வழங்க உள்ளது.கூட்டம் புறக்கணிப்பு?கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழகம், புதுவை மற்றும் கேரளா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனையும் மீறி அணையை கட்ட அம்மாநில அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில், நாளை நடக்கும் காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த 3 மாநிலங்களும் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆணையம் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்புகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற இருந்த நிலையில், தற்போது திடீரென ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 17ம் தேதி நடக்க இருந்த இதன் கூட்டம், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இப்போது, மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக காவிரி ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.