பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேசன்.. தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்.!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகள் மற்றும் பரணிதரன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாய் பரணி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் உணவு அருந்தி விட்டு உடனே பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரணிதரன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகனின் உடல் அடக்கத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தாயை உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து மீண்டும் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகள் இனியாவும் மேல் சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் தாய் பரணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் இனியா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் சிறுவன் பரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தங்களால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும் என மருதூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், பலாப்பழம் தொடர்ந்து கூல்டிரிங்ஸ் சாப்பிடுவதால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சிறுவனின் பிரேத பரிசோதனை, மற்றும் மருதூர் போலீசாரின் விசாரணையில் உண்மை நிலை தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் குடும்ப பிரச்சனை காரணமாக கூல்டிரிங்ஸில் எலி பேஸ்ட் கலந்து மகன், மகளுக்கு கொடுத்து தாயும் குடித்ததாக உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஆகையால் போலீசாரின் தீவிர புலன் விசாரணைக்குப் பின்னரே பலாப்பழ உயிரிழப்பின் பின்னணி குறித்த விவரங்கள் தெரிய வரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.