திருவனந்தபுரம்: கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரே, தங்க கடத்தலில் ஈடுபட்டார். மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நான் செயல்பட்டேன். இதை தவிர நான் வேறு எந்த தவறும் செய்யவில்லை. கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழக்கில் நேரடி தொடர்பு உள்ளது.
இதில் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உங்களை (பிரதமர்) நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.