சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவரது தரப்பினர் இறங்கியுள்ளனர். கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எழுந்த பேச்சு தொடர்பான சர்ச்சை, முடிவின்றி தொடர்கிறது. சென்னை வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி (நாளை) கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை முன்னிறுத்தி, அதற்கேற்ப சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவரது தரப்புமுனைப்பு காட்டி வருகிறது. அதே நேரம்,‘ஒற்றைத் தலைமை வேண்டாம்.
தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த அசாதாரண நிலையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம். கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதுடன், கூட்டத்தை தடுப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
இந்த சூழலில், அதிமுகவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 66-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை இபிஎஸ்ஸுக்கு தெரிவித்துள்ளனர். தஞ்சை, தேனி, விருதுநகர், சென்னையில் ஒரு மாவட்டம், அரியலூர், பெரம்பலூர் என குறைந்த எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்களே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.
ஏற்கெனவே ஓபிஎஸ் பக்கம் இருந்த நெல்லையை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களான நெல்லை தச்சை கணேசராஜா, விருதுநகர் ரவிச்சந்திரன் ஆகியோரும், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் நேற்று இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுதவிர, மொத்தம் உள்ள 2,500 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக, பொதுக்குழுவை குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனால், ‘ஒற்றைத் தலைமை எனவந்துவிட்டால், கட்சியில் தனது செல்வாக்கு மேலும் குறைந்துவிடும்’ என்று ஓபிஎஸ் கருதுவதால், பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை நிறைவேற்ற விடக்கூடாது என்பதில்அவரது தரப்பு உறுதியாக இருக்கிறது.
இதற்கிடையே, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் நேற்று 8-வது நாளாக தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பொதுக்குழு தீர்மானங்கள்
இந்த சூழலில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்களை தயாரிக்கும் குழுவினர், அதற்கான இறுதி வடிவத்தை அளிக்கும் பணியில் நேற்று முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். நிறைவாக 23 தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, சிறப்பு தீர்மானமாக, ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருப்பதாவும், முன்னதாக, சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றி, அதன் பிறகு, ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ் எழுதிய கடிதத்துக்கு, இபிஎஸ் நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளார். ‘திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளதால், கூட்டத்தை நடத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அதில் இபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தை அணுக திட்டம்
ஒருவேளை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்று கூறி தேர்தல் ஆணைத்திடம் முறையிட ஓபிஎஸ் தரப்புமுடிவெடுத்துள்ளது. பொதுக்குழு நடப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தரப்பு அணுகவும் வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது.