இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மாயாஜாலங்கள் செய்துவருகிறது. பாகுபலி தொடங்கி கே.ஜி.எஃப் வரை மாற்று மொழி திரைப்படங்கள் ஒரு பக்கம் கல்லா காட்ட, இன்னொரு பக்கம் ‘கிளாஸும் நான் தான்.. மாஸூம் நான் தான்’ என கமல்ஹாசன் வித்தை காட்டுகிறார். கலெக்‌ஷன் கிங்குகளான ரஜினி, விஜய், அஜித்தையெல்லாம் ஓரங்கட்டி கெத்து காட்டியிருக்கிறார் உலகநாயகன்.ஆனால், இந்த ஒன் டைம் ஒண்டர்களையெல்லாம் விலக்கி வைத்து பார்த்தால் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் டாப் 2 செல்லப்பிள்ளைகள் விஜய்யும் அஜித்தும்தான்.

பாக்ஸ் ஆபீஸ் தாண்டி வெற்றிக்கான பல அளவுகோலை சினிமா பார்க்கத் தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. யுட்யூபில் டீசர், டிரெயிலர் பார்த்தவர்களின் எண்ணிக்கை, ஹேஷ்டேகில் எழுதப்படும் ட்வீட்கள், ஆன்லைன் போல்களில் விழும் வாக்குகள் என ஏகப்பட்ட ரேங்க் கார்டுகளை நீட்டுகிறார்கள் நெட்டிசன்கள். இவற்றில் பெரும்பாலானவற்றில் மறுக்கவே முடியாத சாதனைகளை தன்வசம் கொண்டிருப்பது சந்தேகமே இல்லாமல் விஜய்தான். ஆண்டு இறுதில் சமூக வலைதள நிறுவனங்கள் தரும் டேட்டா அனைத்திலும் விஜய்யின் சிரித்த முகமே அலங்கரித்து கொண்டிருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஹிஸ்டரி & ஜியாகரஃபி பிரச்னையின்றி ‘ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா’ என தைரியமாக சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவின் பீஸ்ட் ஆக அவர் மாற உதவிய விஷயங்கள் என்ன என்னவென பார்க்கலாம். அதற்கு முன், பிறந்த நாள் வாழ்த்துகள் தளபதி. இதே போல இன்னும் இளைமையுடன் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

image

1)திட்டமிடல்:

விஜய்யின் கரியர் கிராஃபை ஒரு முறை விக்கிபீடியியாவில் பாருங்கள். ஆரம்பக்கட்டத்தில் ஆண்டுக்கு 4 படங்கள் வெளியாகியிருக்கும். 2000க்குப் பின்னர், அது 3 ஆக குறைந்தது. அதன் பின் ஆண்டுக்கு 2 ஆகி, தற்போது வருடத்துக்கு ஒன்று அல்லது 2 ஆண்டுக்கு 3 படங்கள் என ஆகியிருக்கிறது. கொரோனாவால் 2020ல் மட்டும் படங்கள் இல்லை. விஜய்யின் சமகால நடிகர்களில் வேறு யாருக்கும் இந்த டிராக் ரெக்கார்ட் கிடையாது. தன் வியாபார எல்லை உணர்ந்து, சீரிய இடைவெளியில் படங்கள் வெளியிட்டதால் விஜய்யின் மார்க்கெட் எப்போதும் சரிவைக் கண்டதே இல்லை.

2) சுயபரிசோதனை:

விஜயின் கரியரில் 2010க்கு முன் ஒரே ஒரு படம் வெளியான ஆண்டு என்றால் அது 2006. அதற்குக் காரணம் இருக்கிறது. 2004ல் வெளியான கில்லி பிளாக்பஸ்டர். தொடர்ந்து வந்த மதுர விமர்சன ரீதியாக சரியான வரவேற்பைப் பெறாவிட்டாலும் வசூலில் குறைவில்லை. அதன் பின் திருப்பாச்சி, சிவகாசி என கமர்ஷியல் படங்கள் மாஸ் ஹிட்தான். ஆனால் 2006ல் வந்த ஆதி பெரிய தோல்வி. ஒரே ஒரு தோல்விதானே என விஜய் அசால்ட் ஆக நினைக்கவில்லை. தனது நடிப்பும் தானும் மக்களுக்கு போர் அடிக்கத் தொடங்கிவிட்டதோ என சுய பரிசோதனை செய்தார். கரியரில் கொஞ்சம் மாற்றம் தேவை நினைத்தார். நிறைய கதைகள் கேட்டார். எதுவும் செட் ஆகவில்லை. அவசர அவசரமாக அடுத்த பிராஜெக்ட் கமிட் ஆகவில்லை. காத்திருந்து அவர் டிக் அடித்த படம்தான் போக்கிரி. இன்றும் தன்னையும், தன் படங்களையும் சுய பரிசோதனை செய்வதை விஜய் நிறுத்தவில்லை.

image

3) உழைப்பு:

விஜய் போன்ற மற்ற பெரிய நடிகர்களைப் பற்றியும் சொல்லும்போதும் உழைப்பு என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அவர்கள் ஏன் ஹார்ட் வொர்க் செய்ய வேண்டுமெனத் தோன்றலாம். புகழ்பெற்ற பழமொழி ஒன்றுண்டு. உயர செல்ல செல்ல எல்லா பக்கமும் சரிவுதான். அது உண்மை. எந்த அளவுக்கு உயரம் போகிறோமோ, அந்த அளவுக்கு உழைப்பும் அதிகம் தேவை. இல்லையேல் சரிவுதான். இன்றும் விஜய் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ற புகழும், பணமும் அவருக்கு அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால், உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

4) மக்களோடு என்றும் தொடர்பில் இருப்பது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் என்றால் விஜய் பெயர் முதலில் நினைவுக்கு வரும். அனிதா மரணம், தூத்துக்குடி பிரச்னை என கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான சமூக பிரச்னைகளில் விஜய்யின் பெயரை நாம் கடந்திருக்கிறோம். வாய்ப்பிருக்கும்போதெல்லாம் இதைச் செய்ய விஜய் தவறுவதில்லை.

image

5) ரசிகர்களை மறக்காதது:
இப்போதும் மாதந்தோறும் ஒரு நாள் ரசிகர்களை தன் அலுவலகத்தில் சந்திக்கிறார் விஜய். சில முறை ட்விட்டர் மூலமும் ரசிகர்களுடன் உரையாடினார். இசை வெளியீட்டு விழா போல நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களைச் சந்தித்து விடுகிறார். அரசியலுக்கான அச்சாரம் என சொன்னாலும், தன்னை வாழ வைக்கும் ரசிகர்களை எப்போதும் விஜய் மறந்ததேயில்லை. அதைப் போல அவர் ரசிகர்களும் அவரைக் கைவிட்டதேயில்லை.

6) காலத்துக்கேற்ப மாறுவது:

நிச்சயிக்கபட்ட பெண்ணைக் காதலிப்பது.. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை 1000 முறை சொல்லப்பட்ட கதை இது. விஜய் மட்டுமே 10 படங்களிலாவது இதைச் செய்திருப்பார். அது ஒரு காலக்கட்டம். திருமலைக்குப் பின் இது மாறியது. தனக்காகவோ, தன் காதலி அல்லது நண்பன் அல்லது குடும்பத்துக்காகவோ வில்லனைக் கொல்வது அடுத்த ரவுண்ட். இந்த வகையில் 5-8 படங்கள் நடித்திருப்பார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை உச்ச இயக்குநர்கள் இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை. 2011க்கு பின் ஷங்கர், முருகதாஸ் என அதிலும் மாற்றம் வந்தது. அதன் பின், இளம் இயக்குநர்களை நம்பத் தொடங்கினார். அட்லீ, லோகேஷ், நெல்சன் என அது ரவுண்ட். இப்போது முதல் முறையாக தெலுங்கு பக்கம் போயிருக்கிறார். PAN இந்தியா சீசன் இல்லையா? இப்படி, காலத்துக்கேற்ப தன் கரியரை மாற்றிக்கொண்டேயிருக்கிறார் விஜய். அதனால், 30 ஆண்டுகளாக எந்த பெரிய இறக்கமும் காணாமால் தொடர்கிறது அவரது சினிமா பயணம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.