புதுடெல்லி: பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு ஒன்றிய அரசு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கு பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.