மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெடமலை கிராமத்தைச் சேர்ந்த 75-வது லட்சம் பயனாளி நல்லம்மாள் என்பவருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் முனைவர் ப.செந்தில் குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் சு.கணேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆக. 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 75-வது லட்சம் பயனாளிக்கு நாமக்கல் கெடமலை கிராமத்தில் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக 1,021 மருத்துவர்கள் உட்பட 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் நியனம் செய்யப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடந்து வருகிறது என்றார்.

அமைச்சர் யோகா பயிற்சி

கெடமலை மலைக்கிராமத்துக்கு சாலை வசதியில்லாததால் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் ஜம்பூத்து மலையில் இருந்து 4 கி.மீ. நடந்து கெடமலைக்கு சென்றனர். அங்கு, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாணவ, மாணவியர் யோகா பயிற்சி செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.