அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட நாள்முதலே, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக-வினுள் வலுத்துவருகிறது. அதிலும், ஒருதரப்பு ஓ.பி.எஸ் தான் தலைமையேற்க வேண்டும் எனவும், இன்னொரு தரப்பு இ.பி.எஸ் தன தலைமையேற்க வேண்டும் என இருதரப்பு ஆதரவாளர்களும் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். மேலும் இந்த விவாகரத்தில், ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தைப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்போவதாகத் தகவல்கள் வெளியாக, பொதுக்குழுக் கூட்டத்தையே நடத்தக்கூடாதென ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறும்’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில், இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதியை நீக்கிவிட்டு, ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்ற இ.பி.எஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், எம்.ஜி.ஆர் வகுத்த விதியின்படி தொண்டர்கள் மூலமாக இ.பி.எஸ்-ஐ கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி பிரிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றிருந்தார். பின்னர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இணைந்ததையடுத்து 2017-ல் ஓ.பி.எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.