வந்து இறங்கியதும் திரும்பிய ஆயுதப்படை…! அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வந்த ஆயுதப்படை வீரர்கள், அங்கு இறங்கிய வேகத்தில் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அக்கூட்டம் நடைபெறும் வானகரம் திருமண மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஒற்றை தலைமை குறித்தான விவாதம் எழுந்த நாளில் இருந்து, அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதமும், மோதல் போக்கும் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
image
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் எம்ஜிஆர் மாளிகை அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் ஆயுதப் படை பிரிவில் உள்ள மொபைல் இன்சிடென்ட் கமாண்ட் படைப்பிரிவினர் (Mobile incident command) 70 பேர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். ஆனால், ஆயுதப்படையினர் பேருந்திலிருந்து இறங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கிருந்து வேறு பகுதிக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டி இதுவரை விண்ணப்பம் ஏதும் கொடுக்கப்படவில்லை. வேறு இடத்துக்கு பாதுகாப்பு அளிக்க செல்லும்போது தவறுதலாக நாங்கள் இங்கு வந்துவிட்டோம்” எனக் கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர். அதிமுக அலுவலகத்தில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அருகிலுள்ள திருமண மண்டபத்தில் (ஹேமமாலினி) ஆயுதப் படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.