சிவசேனாவின் நம்பிக்கைக்குரிய `தளபதி’ ஏக்நாத் ஷிண்டே… பாஜக-வின் பட்னாவிஸ் பக்கம் சாய்ந்தது ஏன்?!

மகாராஷ்டிராவில் தற்போது புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க பக்கம் சாய்ந்துவிட்டார். அவர்களை பா.ஜ.க குஜராத்திற்கு அழைத்து சென்று, அங்கிருந்து பின்னர் அஸ்ஸாம் மாநிலத்துக்கு அழைத்து சென்று பத்திரமாக வைத்திருக்கிறது. சிவசேனாவுக்கு மிகவும் விஸ்வாசமான தளபதியாக கருதப்படும் ஏக்நாத் ஷிண்டே எப்படி பாஜக பக்கம் சென்றார் என்று அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

அதுவும் பெரும்பாலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களையும் தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு சென்றுவிட்டதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. சிவசேனாவில் நகர்ப்புறம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயின் கட்டுப்பாட்டில்தான் மும்பை மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகள் வருகிறது. ஆனால் மெட்ரோ ரயில் தொடர்பாக பேசவோ அல்லது முடிவு எடுக்கவோ ஏக்நாத் ஷிண்டேயிக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. முதல்வர் உத்தவ் தாக்கரேதான் இதில் எந்த முடிவாக இருந்தாலும் எடுத்து வந்தாராம்.

ஏக்நாத் ஷிண்டே

மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டேயிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் ஷிண்டேயிக்கு எதிராக அமலாக்கப்பிரிவோ, சிபிஐயோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்தான் முதல் முறையாக ஷிண்டேயிக்கும், தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் ஜல்காவ் பகுதியில் சொத்து வரி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. ஷிண்டே அத்திட்டத்தை அமல்படுத்தினார். உடனே சொத்து வரி உயர்வை திரும்ப பெறும்படி பட்னாவிஸ் தெரிவித்த போது, `நீங்கள் கொண்டு வந்த திட்டத்தைத்தான் இப்போது அமல்படுத்துவதாக’ ஷிண்டே தெரிவித்தார்.

உடனே தனது தவறை உணர்ந்த பட்னாவிஸ் சொத்து வரி உயர்வை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பட்னாவிஸ் தலைமையிலான குழு ஷிண்டேயை சந்தித்து பேசியது. அவ்வாறு உருவானதுதான் இருவருக்கும் இடையிலான நட்பு. பணம் மற்றும் ஆட்கள் பலம் ஆகிய இரண்டிலும் ஷிண்டே அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். அதோடு ஏராளமான சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் தனிப்பட்ட முறையில் ஷிண்டேயிக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

எனவே சிவசேனா ஆட்சியை கலைக்கவேண்டுமானால் அதற்கு ஷிண்டேதான் சரியான ஆள் என்று பட்னாவிஸ் கணக்கு போட்டு காய் நகர்த்த ஆரம்பித்தார். மற்றொரு புறம், கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் சந்திக்க முடியாத இடத்தில் இருந்தார். கொரோனா மற்றும் உடல் நலம் பாதிப்பு என அடுக்கடுக்கான பிரச்னைகள் வந்ததால் உத்தவ் தாக்கரே பெரும்பாலும் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்தார். அதோடு அனைத்து முடிவுகளையும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே எடுக்க ஆரம்பித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

எப்போதுமே கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவிக்காத ஏக்நாத் ஷிண்டேயிடம் சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பாகக்கூட எந்த வித கருத்தும் கேட்கவில்லை. அதோடு மறைந்த சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் திகேயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை பார்க்க வந்த உத்தவ் தாக்கரே படம் முடியும் முன்பாகவே புறப்பட்டு சென்றது ஷிண்டேயிக்கு மிகவும் மன வருத்தமாக அமைந்தது. இப்படத்தில் ஷிண்டேயின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து படமாக எடுத்திருந்தனர்.

கட்சி மீது இருந்த வருத்தங்கள், மற்றொரு பக்கம் தேவேந்திர பட்னாவிஸின் அரவணைப்பான வார்த்தைகள் இரண்டும் சேர்ந்து ராஜ்ய சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற உதவியாக அமைந்தது. இதில் ஷிண்டே பல எம்.எல்.ஏ.க்களை பாஜக-வுக்கு வாக்களிக்க செய்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் முக்கியமாக இலாகாக்கள் இருந்தது. துணை முதல்வர் அஜித்பவார் சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வந்தார். அவர்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனால்தான் சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற முடிந்தது.

ஆதித்ய தாக்கரே

சாதாரண ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய ஷிண்டே மட்டும் தான் கட்சியின் மேல் மட்டத்தலைவர்களிடமும் அதேசமயம் தொண்டர்களிடமும் நெருக்கமாக பழகக்கூடியவர். 1997-ம் ஆண்டு முதல் முறையாக மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 2004-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் சூழ்நிலையில் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று ஷிண்டே எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்காமல் போனதோடு கட்சியில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டில் ஓரங்கட்டப்பட்டார். இதனை கவனித்து சரியாக காய்களை நகர்த்தி ஷிண்டேயை தங்களது பக்கம் தேவேந்திர பட்னாவிஸ் கொண்டு வந்துவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.