வேளாண் உற்பத்தியை பெருக்கிட மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கிட, விவசாயிகளுக்கு செயல்முறையுடன் பயிற்சி அளித்திட ‘வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை’ (ஆத்மா) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், விவசாயம், தோட்டக்கலை, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பால் வளம் பெருக்குதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குதல், உற்பத்தி செய்த வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தல் குறித்து செயல்முறையுடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் பண்ணைகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்கு விவசாயிகளை களப்பயணம் அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக உள்ளது.இந்நிலையில் மத்திய அரசு, விவசாயிகளுக்கான ‘ஆத்மா’ திட்டத்தை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, புதுச்சேரி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனையொட்டி, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், விவசாயிகளுக்கான ஆத்மா திட்டத்தை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
டில்லி சென்றுள்ள வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், நேற்று மத்திய வேளாண் இணைச் செயலர் சாமுவேல் பிரவீன் குமாரை சந்தித்து, மாநிலத்தில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.பின்னர், செப்டம்பர் மாதத்தோடு முடிவதாக மத்திய அரசு அறிவித்திருந்த ஆத்மா திட்டத்தினை தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும், இந்தாண்டிற்கு இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய வேளாண் இணை செயலர், ‘ஆத்மா திட்டத்தை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் நிதி வழங்க ஆவன செய்கிறோம்’ என உறுதி அளித்தார்.இந்த சந்திப்பின்போது, மாநில வேளாண் செயலர் ரவிபிரகாஷ், அமைச்சரின் தனிச் செயலர் மனோகரன் உடனிருந்தனர்.