மும்பை: மராட்டியத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேனா எம்எல்ஏக்கள் 40 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தும், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். அவரது ஆட்சிக்கு இதுவரை ஆபத்து ஏற்படாத நிலையில், தற்போது அம்மாநில சட்டமேலவை தேர்தலில் ஏற்பட்ட சிக்கலை காரணம் காட்டி மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் முகாமிட்டு, ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏக்நாத் ஷிண்டே உடன் உத்தவ் தாக்கரே தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஏக்நாத் விதித்த நிபந்தனையை உத்தவ் ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுஹாத்தி சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக பேருந்தில் ஏற்றப்பட்டு தங்கும் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கவுஹாத்தி விமானநிலையத்தில் பேசிய ஏக்நாத், மகாராஷ்டிராவில் பால் தாக்கரே கண்ட கனவின்படி, இந்துவா ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு துணைபோகும் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வசதியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூடவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. மொத்தம் 288 பலம் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கு 152 பலம் உள்ளது. தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உத்தவ் தாக்கரே அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே மாநில அமைச்சரவை கூட்டத்தை, இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதால் மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.