மும்பை: மராட்டிய முதலமைச்சர் உத்தவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தகவல் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் மராட்டிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேவை சந்திக்க முடியவில்லை என கமல்நாத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய சட்டப்பேரவை கலைக்கப்படுமா?சிவசேனா எம்.எல்.ஏக்கள் 40 பேர் உத்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மராட்டிய சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ள சூழலில் அமைச்சரவை கூட்டத்துக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். மராட்டிய அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கலைப்புக்கான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. முன்னதாக இன்று காலையில் மராட்டிய ஆளுநர் பகத்சிங் கொஷ்யாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.