ஜெ. சமாதியில் அதிமுக பிரமுகர் தற்கொலை முயற்சி: ஓ.பி.எஸ் உருக்கமான வேண்டுகோள்

அதிமுகவில், ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஒருவார காலமாக விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில். இந்த விவகாரத்தில் தொண்டர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஒ.பன்னீர்செல்வம் தனது டவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, ஒபிஎஸ் ராஜினாமா மற்றும் தர்மபயுத்தம், இபிஎஸ் முதல்வரானது, ஒபிஎஸ் இபிஎஸ் கூட்டணி, சசிகலா சிறை தண்டனை உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேறியது.

அந்த வகையில் கடந்த ஒருவார காலமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அதிமுக ஒற்றை தலைமை விவகாரம். கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்றும். ஒற்றை தலைமை இல்லாததே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். கட்சி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகினறனர்.

இதில் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியின் தலைமை பொறுப்பை வகிக்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில். வரும் 23-ந் தேதி (நாளை) அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. அதற்குள் இந்த ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சி பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி ஒபிஎஸ் தரப்பினர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர்.

ஆனாலும் கட்சி பொதுக்குழு நடத்த நிதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பூங்கொத்துடன் ஒன்றாக நிற்கும் கட்டவுட்கள் பொதுக்குழு நடைபெறும் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளை பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து கட்சினரிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூடிய ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமு் என்று கோஷமிட்டனர். இதனிடையே தென்சென்னை வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளராக இருக்கும் கேசவன் என்பவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். தொண்டர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஒ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.