வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போல், அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம், கடந்த 5 நாட்களாக, டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தி நாட்டின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்துள்ளது. சில தொழிலதிபர்களிடம் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்து விட்டார். தற்போது, ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்பையும் மூடிவிட்டார். முதலில் ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியம் குறித்து பேசினர். தற்போது பதவியும் இல்லை; பென்சனும் இல்லை என்கின்றனர்.
சீன ராணுவம் நமது மண்ணில் அமர்ந்துள்ளது. ஆனால், நமது ராணுவத்தை பலப்படுத்துவதை விட்டுவிட்டு அரசு பலவீனப்படுத்தி வருகிறது. போர் நடந்தால், அதன் முடிவில் இது தெரியவரும். மத்திய அரசு ராணுவத்தை பலவீனப்படுத்தி நாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் தங்களை தேச பக்தர்கள் கூறி வருகின்றனர்.
விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ளும் என நான் கூறினேன். அதனை அரசு செய்தது. தற்போது, அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் என காங்கிரஸ் கூறுகிறது. இளைஞர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தருகின்றனர். தேசத்தை வலுப்படுத்த உண்மையான தேச பக்தி தேவை என்பதை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்வோம்.
அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் என்னை பாதிக்காது. காங்கிரஸ் கட்சி தொண்டரை பயமுறுத்த முடியாது. அச்சுறுத்த முடியாது என்பதை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய போது எனக்கு ஆதரவு அளித்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.