Tamilnadu Engineering Admission 2022 online application and counselling details: தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கலந்தாய்வு நடைமுறை என்ன? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கு ஆன்லைனில் பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 19 என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பொறியியல் படிக்க விருப்பமா? டாப் அரசு கல்லூரிகள் இவை தான்!
தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும், இதர இடஒதுக்கீட்டு பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள்
10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
சாதிச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
ஆதார் அட்டை (விருப்பமானது)
8-12 ஆம் வகுப்பு படித்த பள்ளிகளின் விவரம்
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
இருப்பிடச் சான்று (தேவைப்பட்டால்)
7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஓதுக்கீட்டை வேண்டுபவர்கள் அதற்குரிய சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பிப்போர்கள் அதற்குரிய சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முதலில் Instructions and Information Brochure ஆகியவற்றை தெளிவாக படித்துக் கொள்ளுங்கள். அதில் சான்றிதழ்கள் என்ன வடிவத்தில் வேண்டும், எந்த அளவில் வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துக் கொண்டு, அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள்.
அடுத்தப்படியாக உங்களுக்கென தனியாக இ-மெயில் ஐடி-யை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த இ-மெயில் ஐடி உங்கள் தனிப் பயன்பாட்டிற்கானதாக இருக்க வேண்டும். அதன் பாஸ்வேர்ட்டை யாரிடமும் பகிர வேண்டாம். நீங்கள் ரகசியமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அந்த பக்கத்தில் Click here for B.E/B.Tech என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த பின் தோன்றும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக, கடவுச்சொல்லை அறிவிப்பில் குறிபிட்டுள்ள வகையில் உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு பயனர் ஐடி வழங்கப்படும். அதனைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பச் செயல்முறையை தொடங்க வேண்டும்.
இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், முகவரி போன்றவற்றை உள்ளிட்டு சேமித்துக் கொள்ளவும்.
சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், அதற்கான விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்ததாக உதவித் தொகை தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.
பின்னர் பள்ளி மற்றும் பிற படிப்பு தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக சரிபார்த்து சேமித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனையும் நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே செலுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு : ரூ. 500, SC/SCA/ST பிரிவுகளுக்கு ரூ. 250, சிறப்பு பிரிவினருக்கு ரூ.100
இறுதியாக விண்ணப்பத்தினை சமர்ப்பித்தப்பிறகு உங்களுக்கு விண்ணப்ப எண் உடன் கூடிய விண்ணப்ப படிவம் கிடைக்கப் பெறும், அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை தொடங்கும் நாள் : 20.06.2022
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.07.2022
சான்றிதழ் சரிபார்ப்பு : 20.07.2022 – 31.07.2022
கட் ஆஃப் கணக்கிடுவது எப்படி?
உங்களுடைய கணிதப் பாட மதிப்பெண்ணை முழுமையாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களை பாதியாகவும், அதாவது 100 மதிப்பெண்களை 50 மதிப்பெண்களுக்கு சுருக்கி, கணித மதிப்பெண்களுடன் கூட்டிக் கொள்ளவும். கட் ஆஃப் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது.
சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படாவிட்டால், விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், அதற்குள் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே சி.பி.எஸ்.இ மாணவர்கள் பிற சான்றிதழ்களை தயாராக வைத்திருந்தால், முடிவுகள் வெளியான உடனே விண்ணப்பித்து விடலாம்.
கலந்தாய்வு
கலந்தாய்வு செயல்முறை குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த முறை கல்லூரி விருப்பத் தேர்வுகளுக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளது. எனவே அவசரப்படாமல் பொறுமையாக கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
அடுத்ததாக தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்ட உடன், உங்கள் அந்த ஒதுக்கீடு ஏற்புடையதாக இருந்தால், நீங்கள் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த 7 நாட்களுக்குள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்குச் சென்று கட்டணங்களை செலுத்தி, ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்தாகி விடும்.
அடுத்ததாக ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் மாற்ற விரும்புகிறேன் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், நீங்கள் டி.எப்.சி மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் மாற்ற விரும்புகிறேன் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், நீங்கள் டி.எப்.சி மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
நான்காவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஐந்தாவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் வேறு படிப்புக்குச் செல்ல விரும்புகிறேன் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஆறாவது ஆப்ஷன், உங்களுக்கு தற்காலிக ஓதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த சுற்றில் தேர்ந்தெடுக்க தயாராகிறேன் என்பதை கிளிக் செய்யலாம், என்று கூறியுள்ளார்.