பெங்களூரு: நடிகர் திகந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவாவில் முகாமிட்டிருந்தபோது, நடிகருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகர் திகந்த், கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அப்போது திகந்த், குட்டிக்கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் சுளுக்கு மற்றும் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததால், அவரது குடும்பத்தினர் அவரை விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு சென்றனர். பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திகந்த் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘மாலையில்தான் நடிகர் திகந்த் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. பயப்பட வேண்டியதில்லை. இன்னும் சில நாட்களில் குணமடைந்துவிடுவார்’ என்றனர்.