"யாரோ என் மொபைலை ஹேக் பண்ணிட்டாங்க!' – ஹேக்கரைக் கண்டறிந்தததும் தம்பதிக்கு கிடைத்த ஷாக்!

ஜெய்ப்பூரில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான 13 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரின் செல்போன்களையே ஹேக் செய்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் தனது பெற்றோரின் செல்போன்களில் இருந்த அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு, ஆபாச செய்திகளை அவர்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், அதைவைத்து மிரட்டியும் உள்ளான் அந்த சிறுவன். மேலும் அவர்களுடைய செல்போன் திரைகளில் விசித்திர அனிமேஷன்களையும் ஃப்லாஷ் செய்துள்ளான். தங்களுடைய செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தபின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சைபர் செல் போலீசார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியபோது, இந்த மொத்த கிரைமையும் தங்கள் சொந்த மகனே செய்திருக்கிறான் என்று தெரிந்து அதிர்ந்துபோயுள்ளனர் பெற்றோர். முதலில் இதை யாரோ ஒரு ஹேக்கர் சொல்லித்தான் செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டல் விடுத்ததாகவும் சிறுவன் கூறியிருக்கிறான். பின்னர் போலீசின் கிடுக்குப்பிடி விசாரணையில் பெற்றோரை ப்ராங்க் செய்யவே இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
image
இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனரேட்டின் சைபர் நிபுணர் முகேஷ் சௌதரி கூறுகையில், ’’இப்படி ஒரு புகாரை இப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறோம். தனது மகன் செய்த காரியத்தை கேட்டறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் யாரோ வீட்டை நோட்டமிடுவதாக பெற்றோரை நம்பவைக்க மொபைல் சிப்ஸ், ப்ளூடூத் இயர்போன்கள் போன்றவற்றையும் வீட்டுசுவரில் ஒட்டவைத்திருக்கிறான்.
மேலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் சிறுவனின் பெற்றோருடைய ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல்களை பதிவிட்டது, மிரட்டியது போன்ற செயல்களில் ஈடுபட்டது எங்களுடைய விசாரணையில் தெரியவந்தது. மேலும் அது சிறுவனின் மாமா என்பதும், அவருடைய செல்போனைத்தான் சிறுவன் அதிகம் பயன்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது. அதை தான் செய்ததாக சிறுவன் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதுகுறித்து பெற்றோர் புகார் எதுவும் அளிக்காததால் சிறுவன் மீது வழக்குத் தொடரவில்லை. இதன்மூலம் பெற்றோர் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் சிறிதளவேனும் தொழில்நுட்பங்களை கற்று வைத்திருக்க வேண்டும் என்பதுதான்’’ என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.