முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார் – உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை,

மும்பை, மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் 2019-ல் நடந்த தேர்தலில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களை கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் சுயேட்சைக்குள் உதவியுடன் 167 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். 40 எம்.எல்.ஏ.க்களில் 33 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, தன்னிடம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், 6 சுயேட்சைகள் என 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.

இதனை தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், மராட்டிய முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில்,

எம்.எல்.ஏ.க்கள் சொன்னால் எனது முதல்-மந்திரி பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன். இது எண்ணிக்கையை பற்றியது அல்ல, எனக்கு எதிராக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள், அப்படி எனக்கு எதிராக ஒரு எம்.எல்.ஏ. இருந்தால் கூட எனது பதவியை விட்டுவிடுகிறேன். ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தால் அது எனக்கு மிகவும் அவமானகரமானது.

முதல்-மந்திரி பதவி வரும், போகும் ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து. கடந்த 2 ஆண்டுகளில், மக்களிடம் அதிக பாசத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது அதுவே நிரந்தரமானது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.