லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்தினார். உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த தர்மேந்திரா என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக பரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை தர்மேந்திரா அழைத்து வந்தார். திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பினரிடம் இசைக்குழுவினர் பணம் கேட்டனர். ஆனால் மணமகள் தரப்பினர்தான் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, பணத்தை கொடுக்க மணமகன் தரப்பினர் மறுத்துவிட்டனர். இதற்கு மணமகள் தரப்பினர் தாங்கள் இசைக்குழுவை வரவழைக்கவில்லை எனக்கூறி, இசைக்குழுவினருக்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மணமகளும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த மாப்பிள்ளை தர்மேந்திரா தனது கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி மணமேடையில் இருந்து வெளியேறினார். மேலும், தான் அணிந்திருந்த ‘செயினை’ தூக்கி எரிந்துவிட்டு, பேண்ட் வாத்திய ஊர்வலத்துடன் வெளியேறினார். இதனால் திருமணம் நின்றது. பேண்ட் வாத்திய குழுவினருக்கான சம்பளத்தை யார் கொடுப்பது என்ற தகராறால் திருமணமே நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.