சீர்குலைந்தது இலங்கை பொருளாதாரம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளிப்படை| Dinamalar

கொழும்பு:கச்சா எண்ணெய் வாங்கக் கூட பணமில்லாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக, அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கச்சா எண்ணெய் வாங்கக் கூட அன்னியச் செலாவணி இல்லை. இலங்கை எண்ணெய் நிறுவனத்தின் நிலுவையால், கச்சா எண்ணெய் வழங்க பல நாடுகள் மறுக்கின்றன.

எதிர்பார்ப்பு
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், பொருளாதார சீர்குலைவின் தாக்கத்தை குறைத்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்து விட்டோம்.அதனால், இன்று வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். உணவு, எரிபொருள், மின்சாரம் என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது, மிக மோசமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
நம் பிரச்னைகளை தீர்க்க, எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கைக்கு எரிபொருளை இலவசமாக இந்தியா வழங்கவில்லை; கடன் உத்தரவாதத்தின்படி வழங்கியுள்ளது. அந்த கடனை இலங்கை திரும்பத் தர வேண்டும். இந்தியாவும் அதன் சக்திக்கு ஏற்ப தான் நமக்கு உதவ முடியும்.
இதற்கு மேலும் நாம் எதிர்பார்க்க முடியாது.நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, சர்வதேச நிதியம் தான். அடுத்த மாதம் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கை
அடுத்த சில தினங்களில் அமெரிக்க கருவூலத் துறை பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். அதுபோல இந்திய ரிசர்வ் வங்கி குழுவும், இங்குள்ள பொருளாதார சூழலை பார்வையிட வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.சமீபத்தில் அன்னிய கடன்களை திரும்பச் செலுத்த இயலாது என, இலங்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து, அமெரிக்க வங்கி ஒன்று சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.