குடும்ப தகராறில் பரிதாபம்; விஷம் குடித்த தாயும் பலி| Dinamalar

புவனகிரி, :புவனகிரி அருகே, குடும்ப தகராறில், குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து மகன் இறந்த நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கஸ்பா ஆலம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மனைவி பரணி, 26. இவரின் மகள் இனியா, 8, மகன் பரணிதரன், 6. மூவரும் கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் உணவுடன், பலா சுளை, குளிர்பானம் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக, புவனகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரணிதரன் இறந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமானதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், போலீஸ் விசாரணையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பலாச்சுளையை குளிர்பானத்துடன் சாப்பிட்டதால் இறக்கவில்லை என்பது தெரிந்தது.

வேல்முருகன், மனைவி பரணி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பரணி, எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தானும் குடித்து விட்டு, மகன், மகளுக்கு கொடுத்துள்ளார். மகன் இறந்து விட்டார். தாய் பரணியும் நேற்று இறந்தார்; மகள் இலக்கியா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் மகன், தாய் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.