அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், இருவரும் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இ.பி.எஸ்-சின் கை ஓங்கியுள்ளதாகவே தெரிகிறது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருதரப்பு வாதங்களும் நடந்து வருகிறது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திரண்டு இ.பி.எஸ்-க்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஓ.பி.எஸ் நல்லதே நடக்கும் அமைதியாக இருங்கள் என்று தன்னை சந்தித்து வரும் ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் பொதுக்குழுவுக்கு வாருங்கள், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-க்கு எழுதிய கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனவே, நீங்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வர வேண்டும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் பொதுக்குழுவில் இணைந்து பங்கேற்போம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளலாம்; சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் நிலவவில்லை; அதனால், திட்டமிட்டபடி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“