பாஜ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான முர்மு நாளை வேட்பு மனுத்தாக்கல்: யஷ்வந்த் சின்கா 27ல் மனுத்தாக்கல்

புதுடெல்லி: பாஜ கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் திரவுபதி முர்மு, நாளை வேட்பு மனு தாக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய அவருடன், பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் செல்ல உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில் போட்டியிட ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி பிரிவைச் சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்முவை அக்கட்சியின் நாடாளுமன்ற குழு நேற்று முன் தினம் தேர்வு செய்து அறிவித்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா களமிறங்குகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 29ம் தேதி.இந்நிலையில், பாஜ வேட்பாளர் முர்மு நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளரை 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும். அந்த வகையில், முர்முவை முதல் நபராக பிரதமர் மோடி முன்மொழிவார் என கூறப்படுகிறது. மேலும், நாளை முர்மு வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் போது, அவருடன் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர்கள், அவருடன் பேரணியாக செல்ல உள்ளனர். இதில் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பாஜ ஆதரவுக் கட்சி பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இது முர்முவுக்கான ஆதரவை காட்டும் வகையில் இருக்கும் என பாஜ எதிர்பார்க்கிறது.ஜனாதிபதி தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சித் தலைவர்களுடன் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, பல கட்சி எம்பி, எம்எல்ஏக்களின் முர்முவுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். முர்மு ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் ஆதரவு தரும். இதனால், முர்மு வெற்றி பெறுவதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளதாக பாஜ வட்டாரங்கள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா, வரும் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற யஷ்வந்த் சின்கா, ஜார்க்கண்ட், பீகாரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் யஷ்வந்த் சின்கா அளித்த பேட்டியில், ‘‘ஜனாதிபதி தேர்தல் என்பது எனக்கான தனிப்பட்ட போட்டி அல்ல. இது நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான போட்டி. இதில் மக்கள் பிரதிநிதிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும். பாஜ ஆட்சியில் நாடு இன்று சரியான பாதையில் பயணிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மையை மறைக்க அக்னிபாதை எனும் திட்டத்தை கொண்டு வந்ததால், ஒட்டுமொத்த நாடும் கையில் ஆயுதம் ஏந்தி உள்ளது. திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு எதிராளி அல்ல. இது ஒரு சித்தாந்த ரீதியான மோதல். இந்த நாட்டிற்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி இருக்கக் கூடாது,’’ என்றார்.* ஆச்சரியமும், மகிழ்ச்சியும்…ஒடிசா மாநிலம், ராய்ரங்க்பூரில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் திரவுபதி முர்மு அளித்த பேட்டியில், ‘ஜனாதிபதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதை டிவி.யில் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணான நான், நாட்டின் உயர் பதவிக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒடிசாவின் எம்பி.க்களும், எம்எல்ஏ.க்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கவே இல்லை,’’ என்றார். மேலும், கோயில்களுக்கு சென்றும் அவர் வழிபாடு நடத்தினார்.* பிஜூக்கு 31,000 வாக்குஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகள் உள்ளன. அதைத்தவிர, பாஜ வேட்பாளர் முர்மு வெற்றி பெற 13,000 வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. பாஜ கூட்டணியில் அல்லாத பிஜூ ஜனதா தளம், முர்முக்கு ஆதரவு அளிப்பது உறுதியாகி உள்ளது. இதன்படி பிஜூ ஜனதா தளத்திற்கு 31,000 மதிப்பிலான வாக்குகள் உள்ளன.* தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த 3 சோகங்கள்சமூகத்தின் பின்தங்கிய இடத்தில் இருந்து, 1997ல் கவுன்சிலராகி, பல தடைகளை தாண்டி இன்று ஜனாதிபதி வேட்பாளராக உயர்ந்துள்ளார் திரவுபதி முர்மு. ஒடிசா மாநில அமைச்சராக 2 முறை பதவி வகித்த இவர், 2007ம் ஆண்டு சிறந்த எம்எல்ஏவுக்கான விருதை பெற்றவர். 2015 முதல் 2021ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தவர். அரசியல் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்வில் பல சோகங்களை முர்மு கடந்து வந்துள்ளார். குறிப்பாக, இளம் வயதிலேயே, முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு மாரடைப்பால் காலமானார். இந்த சோகத்தை கடந்து குழந்தைகளை வளர்த்து வந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அவரது மகன் மர்மமான முறையில் இறந்தார். 2012ல் மற்றொரு மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அடுத்தடுத்த இந்த 3 சோகங்களையும் கடந்து அரசியலில் வெற்றி பெற்றார் முர்மு. அவரது மகள் புவனேஸ்வரில் வசிக்கிறார்.* இசட் பிளஸ் பாதுகாப்புஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே முர்முவுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. முர்முவுக்கு 14-16 துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.