சென்னை: ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது. கூட்டத்துக்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளை செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, கட்சியின் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பின் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
இதற்காக, ஜூன் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 14-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து நிர்வாகிகள் பேசியதால் கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. ஓபிஎஸ்ஸும் பழனிசாமியும் கடந்த ஒரு வாரமாக தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஒற்றைத் தலைமை இப்போதைக்கு தேவையில்லை. இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என தெரிவித்த ஓபிஎஸ், தன்னை அதிமுகவில் இருந்து ஓரம்கட்ட முடியாது என்றார். அதேநேரத்தில், ஒற்றைத் தலைமையை வலியுறுத்தும் பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால், கூட்டம் நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இபிஎஸ் தெரிவித்துவிட்டார்.
இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கட்சியின் வரவு – செலவு கணக்கும் பொருளாளர் பதவியை வகிக்கும் ஓபிஎஸ்ஸிடம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் 2,750 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பார்கள் அழைக்கப்படவில்லை. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன், ஆதார் அட்டை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டமும், அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கும். கூட்டம் கூடியதும், பொருளாளர் ஆண்டறிக்கை வாசிக்க வேண்டும். அதன்பின் அவைத் தலைவர் பேசுவார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்வதற்காக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கட்சியின் சட்ட விதியில் செய்யப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற்று மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் வகையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
இதில் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை முன்னிறுத்தி தீர்மானத்தை முன்மொழிய அவரது தரப்பு நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அத்துடன், அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை நியமித்து, அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுக்குழுவை பழனிசாமி தரப்பு நடத்தி முடித்துவிட்டால், அடுத்தகட்டமாக கட்சியின் பெயர், சின்னத்தை தன் வசம் வைத்துள்ள ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்திடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பேனர்கள் கிழிப்பால் பதற்றம்
பொதுக்குழு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று மாலை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் நூறு பேர், வானகரம் பகுதியில் இருந்து ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அசாதாரணமான சூழலில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கத்துக்கு வரக்கூடாது என கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் பெஞ்சமின் சார்பில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. பேனரில் இருந்த அண்ணா, எம்ஜிஆர், பெஞ்சமின் உள்ளிட்டோரின் உருவங்கள் உள்ள பகுதிகள் கிழிக்கப்பட்டிருந்தன.
பொதுக்குழு அரங்கத்துக்கு பேரணியாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனரை கிழித்ததாக பெஞ்சமின் குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
2,500 போலீஸார் குவிப்பு
பொதுக்குழுவுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக அடையாளம்பட்டு பகுதியில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூடுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையரகம் மேற்கொண்டு வருகிறது. பொதுக்குழு நடக்கும் மண்டபத்தில் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே, போலீஸார் இரும்பு தடுப்புகளை அமைத்து, தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
பாதுகாப்புப் பணிக்காக 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுவுக்கு வரும் அனைவரையும் தீவிரமாக பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.