பாலியல் புகார் வழக்கு : மலையாள நடிகர் விஜய் பாபுவிற்கு முன்ஜாமின்
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் விஜய் பாபு தலைமறைவானார். மேலும் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். இதற்கிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் விஜய் பாபு தரப்பிலிருந்து முன் ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் வாக்குமூலம் அளித்தார். இதனிடையே வழக்கை வாபஸ் பெறும்படி, விஜய்பாபு தனது நண்பர்கள் மூலம் பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் விஜய் பாபுவிற்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. அதோடு விசாரணைக்காக ஜூன் 27ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு சில நிபந்தனைகளையும் விதித்தார்.