'ஒற்றைத் தலைமை பற்றி ஆலோசிக்க கூடாது' – மேல்முறையீட்டு வழக்கில் நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வாதங்கள் முடிவில், “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு பணிகள் வேகமெடுத்தன. அதேநேரம், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணை செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது. மேல்முறையீடு விசாரணை 2.45 மணி அளவில் தொடங்கியது.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் மற்றும் திருமாறன் இருவரும் ஆஜராகினர். சண்முகம் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தங்கள் வாதங்களில், “பொதுக்குழுவில் என்ன நடக்கிறது என்பது தொண்டர்களுக்கு தெரிய வேண்டும். ஓபிஎஸ் தரப்பில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதை தவிர இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக் குழுவில்கூடுதல் தீர்மானங்களை சேர்க்கக்கூடாது.

கட்சியின் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்பது கட்சியின் அடிப்படை விதி. 15 நாட்கள் முன் நோட்டீஸ் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. தனி நீதிபதி உட்கட்சி விவகாரம் எனக் கூறி எங்கள் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம். இரட்டை தலைமை என்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு. ஆனால், ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டலாம் என்ற அச்சம் உள்ளது. ஒற்றைத் தலைமைக்கு ஒப்புதல் தெரிவித்தவர்களுக்கு மட்டுமே, கூட்டத்தில் பங்குகொள்ள டோக்கன் வழக்கப்படுகிறது” என்று வாதிட்டனர்.

இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், “ஒற்றைத் தலைமையால் தனக்கு என்ன பாதிப்பு என்பதை பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பு நிரூபிக்கவில்லை. ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வாறு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. பொதுக்குழுவுக்கு பெருன்பான்மை இருக்கிறது என்றால், விதிகளை திருத்தலாம். இதனால் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்படாது. 23 தீர்மானங்கள் உருவாக்கப்பட்டதே கூறுவது தவறு. கூட்டம் தொடர்பான நோட்டீஸ் மட்டுமே ஓபிஎஸ்க்கு கொடுக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக பொதுக்குழுவில் பேசப்படும் அஜெண்டாக்கள் கொடுக்கப்படுவதில்லை.

இணை ஒருங்கிணைப்பாளரிடம் எந்தவித புதிய தீர்மானங்களும் இல்லை. ஆனால் பொதுக்குழுவில் புதிதாக என்ன விவாதிக்கப்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட புதிய விவாதங்களை மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றை தீர்மானமாக நிறைவேற்றக் கூடாது. மனுதாரரின் அச்சம் நிஜமாகிவிடக்கூடாது” என்று தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதிகளின் கருத்துக்கு, ”அவர்களின் அச்சம் நிஜமாக வாய்ப்புள்ளது. கூட்டத்தில் எந்தவொரு பொதுக்குழு உறுப்பினர்களும் புதிய தீர்மானத்தை முன்மொழியலாம். அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தினால் பொதுக்குழுவுக்கு உள்ள ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதுபோல் அமையும். பொதுக்குழுவுக்கே உட்சபட்ச அதிகாரம் உள்ளது. காலையில் பொதுக்குழுவில் என்ன முடிவெடுக்க போகிறோம் என்பதை யூகமாக சொல்ல முடியாது” என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் பதில் கொடுத்தனர்.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தவித தடையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம். ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர எந்த புதிய ஆலோசனைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவற்றை கொள்கை முடிவுகளாகவோ, தீர்மானங்களோ நிறைவேற்றக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு ஓபிஎஸ்ஸின் சட்டரீதியான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.