புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்தது தொடர்பாக 15ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக மக்களும், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள், வெளிநாட்டினர் போன்றவர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதில் பாஜ உள்ளிட்ட கட்சிகள் பல நூறு கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெற்றுள்ளன. இந்நிலையில், சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர், 2017ம் ஆண்டு நிதி திருத்த சட்டத்துக்கு பிறகு தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்தது தொடர்பான விவரங்களை வழங்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதன்படி, அது தொடர்பான விரிவான விவரங்களை தேர்தல் ஆணையமும் வழங்கியது.ஆனால், ‘தேர்தல் ஆணையம் அளித்த விவரங்களில் இணை கோப்புக்கள் இருப்பதாகவும், முழுமையான விவரத்ைத தேர்தல் ஆணையம் வழங்கவில்லை,’ என்றும் ஒன்றிய தகவல் ஆணையத்தில் லோகேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த குற்றச்சாட்டை தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதோடு, அவர் கேட்ட முழு விவரங்களையும் ஏற்கனவே வழங்கிவிட்டதாக குறிப்பிட்டது. இதனை விசாரித்த ஒன்றிய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்கா, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களும் மனுதாரருக்கு வழங்கப்பட்டு விட்டது. எந்த கோப்புக்களும் வழங்க வேண்டியது இல்லை என்பதை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இதை செயல்படுத்த தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று உத்தரவிட்டார்.