பெங்களூரு: நடிகர் திகந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவாவில் முகாமிட்டிருந்தபோது, நடிகருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல கன்னட நடிகர் திகந்த், கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அப்போது திகந்த், குட்டிக்கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் சுளுக்கு மற்றும் காயம் ஏற்பட்டது. அவர் அலறியபடி குப்புற விழுந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அவரை கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவர்கள் மேல் சிகிச்சை பரிந்துரைத்ததால், அவரது குடும்பத்தினர் அவரை விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு சென்றனர். பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திகந்த் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் மாலையில்தான் நடிகர் திகந்த் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. பயப்பட வேண்டியதில்லை’ என்றனர்.