கனடாவில் நடந்து முடிந்த பெடரல் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 தபால் வாக்குகள் காலக்கெடுவிற்குப் பிறகு வந்ததால் எண்ணப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை கனடாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 99,988 தபால் வாக்குகள் எண்ணப்படாமல் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும், தாமதமாக வாக்கெண்ணும் மையங்கள் கொண்டு சேர்க்கப்பட்டதும், உரிய முறையில் வாக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்ததும் காரணமாக கூறியுள்ளனர்.
குறித்த தபால் வாக்குகள் பெரும்பாலும், கனடாவில் இருந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோரின் தபால் வாக்குகள் என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், 2019 பெடரல் தேர்தலுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் 82 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக கனடாவின் தேர்தல்கள் பகுப்பாய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
குறித்த தேர்தலில், சிறையில் உள்ள கைதிகள் உட்பட 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் தபால் ஊடாக வாக்களித்துள்ளனர்.
பெடரல் தேர்தலின் போது, சிறப்பு வாய்ப்பு மூலம் வாக்களிக்கும் உள்ளூர் வாக்காளர்கள் வாக்கெடுப்பு முடிந்தவுடன் அதை தேர்தல் ஆணையத்திடம் திருப்பி அனுப்ப வேண்டும்.
ஆனால் தபால் வாக்குகளுக்கு குறித்த நாளில் மாலை 6 மணி வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
2019ல் 700,542 வாக்காளர்கள் தபால் வாக்குச்சீட்டுகள் கோரியிருந்த நிலையில், 2021 தேர்தலின் போது மொத்தம் 1,275,226 வாக்காளர்கள் சிறப்பு வாக்குச் சீட்டைக் கோரியுள்ளனர்.
ஆனால் இந்த வாக்குகள் முழுவதும் உரிய நேரத்தில் வாக்குகள் எண்ணும் மையத்தில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றே ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.