இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 Erythropoietin (EPO) தடுப்பூசிகளை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.
நாட்டின் கிராமப்புறங்களில் பரவலாக காணப்படும் சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதன் அவசியம் குறித்து சுகாதார அமைச்சின் அவசர கோரிக்கைக்கு இணங்க, ரூபா 40 மில்லியன் பெறுமதியான இந்த நன்கொடை இலங்கை INSEE Cement நிறுவனத்தின் தாய் நிறுவனமான Siam City Cement Public Limited நிறுவனத்தால் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவரான மேன்மை தங்கிய திரு. போஜ் ஹார்ன்பொல், தாய்லாந்து தூதரகத்தின் பிரதம செயலாளரான திரு பீரபட் டோங்ரோட் மற்றும் INSEE Cement நிறுவனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் சபைத் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க, வெளிவிவகாரங்கள் மற்றும் வியாபார மேம்பாட்டுக்கான தலைமை அதிகாரியான சந்தன நாணயக்கார ஆகியோர் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
“பொறுப்புணர்வுடைய மற்றும் எடுத்துக்காட்டான ஒரு நிறுவனம் என்ற வகையில், INSEE Cement நிறுவனம், எங்களின் வணிக நோக்குக்கு அப்பாற்பட்ட புதிய வழிமுறைகள் மற்றும் முயற்சிகளை தொடர்ந்து கண்டறிந்து, உதவி தேவைப்படும் நேரங்களின் போது சக இலங்கை பிரஜைகளுக்கு ஆதரவளித்து வருகிறது,” என INSEE Cement நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக அவர்கள் கருத்து தெரிவித்தார். “தாய்லாந்தின் Siam Bioscience Company நிறுவனத்திடமிருந்து 10,000 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவிய தாய்லாந்தின் Siam City Cement Public Company நிறுவனத்தின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். சுகாதார அமைச்சின் அவசர கோரிக்கைக்கு எங்களின் உடனடியான மற்றும் தக்க தருணத்தில் செயற்படுவது முக்கியமான மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
INSEE Cement, அது செயல்படும் உள்ளூர் சமூகங்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தொழில்துறை முன்னணியாளராக, தேசிய அபிவிருத்தி, பொருளாதார மற்றும் சந்தை மீட்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது. மிக அண்மையில், சந்தையில் சீமெந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில் INSEE Cement, அதிகபட்ச உற்பத்தி திறனுடன் செயல்படுவதன் மூலமும், அந்த நேரத்தில் சந்தை தேவையை பூர்த்தி செய்ய விநியோக மார்க்கங்களை மேம்படுத்துவதன் மூலமும், சீமெந்து பற்றாக்குறையிலிருந்து சந்தையை ஸ்திரப்படுத்த உதவியது.