காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 920 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலையில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
600-க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இதில் 920 பேர் உயிரிழந்ததாகவும் 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தலிபான் அரசின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி சலாஹுதீன் அயூபி கூறும்போது, “பல கிராமங்கள் தொலைதூர மலைப் பகுதியில் உள்ளதால் விவரம் சேகரிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோஸ்ட் மாகாணத்தை விட பக்திகா மாகாணத்தில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் உணவு வினியோகிக்கவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு தலிபான்கள் கைப்பற்றிய பிறகு சர்வதேச உதவி அமைப்புகள் அந்நாட்டை விட்டு வெளியேறியதால் அந்நாட்டில் மீட்புப் பணி சிக்கலாகியுள்ளது.
இந்நிலையில் தலிபான் உயரதிகாரி அனாஸ் ஹக்கானி தனது ட்விட்டர் பதிவில், “மீட்புப் பணியில் அரசு தனது சக்திக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கடினமான நேரத்தில் சர்வதேச சமூகமும் மனிதாபிமான அமைப்புகளும் எங்களுக்கு உதவும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானிலும்…
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. தலை நகர் இஸ்லாமாபாத் மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் 11.9 கோடி மக்கள் வாழும் 500-க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது” என்று கூறியுள்ளது.
மலைப்பாங்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவின் பெரும் பகுதி நீண்ட காலமாக பேரழிவு தரும் நிலநடுக்கத்தால் பாதிக்க கூடியதாக உள்ளது.
கடந்த 2015-ல் ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2002-ல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கியதில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1998-ல் இதே அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் தொலைதூர வடகிழக்குப்பகுதியில் ஏற்பட்டதில் சுமார் 4,500 பேர் உயிரிழந்தனர்.