தெய்வம் மனுஷ்ய ரூபேண
வெள்ளித்திரை, சின்னத்திரை என நமக்கு பரிச்சயமான முகம் நளினி! ஆன்மிகம் சார்ந்து அவர் கூறும் விஷயங்களை முற்றுப் புள்ளி இன்றிக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவருக்கும், ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்துப் பல்வேறு சிலிர்ப்பூட்டும் விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
“ ‘தெய்வம் மனுஷ்ய ரூபேன’ன்னு சொல்லுவாங்க. எனக்கு தெய்வம் பலமுறை மனித ரூபத்தில் வந்து உதவி பண்ணியிருக்கு. என் மகள் திருமணத்தின்போது என்கிட்ட பத்துப் பைசாகூடக் கிடையாது. என்னடா செய்யப்போறேன்னு திண்டாடிக்கிட்டுருந்தேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே மீனாட்சின்னு ஒரு அம்மாவை சந்திச்சேன். நான் எப்போதும் மீனாட்சியம்மனை வழிபடுவேன். அவங்ககிட்ட யதார்த்தமா பேசிட்டு இருந்தேன். அப்போ, ‘இரண்டு மாசத்துல என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்மா’ன்னு சொன்னேன். ‘அப்படியா சரி… பணத்துக்கு என்ன பண்ணப் போறேன்’னு கேட்டாங்க. அந்தக் கேள்வி என்னவோ பண்ணிச்சி. ‘தெரியலைம்மா’ன்னு சொல்லி அவங்ககிட்ட மனசுல உள்ள கவலையை மொத்தமா இறக்கி வச்சிட்டேன்.
அடுத்து மீனாட்சி அம்மாவே என்னை ஒரு மூணு, நான்கு கோயில் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டாங்க. அதில் கொஞ்சம் பணம் தயார் பண்ணினேன். அடுத்து ‘இப்ப உனக்கு ஓகேவா பணம் போதுமா’ன்னு கேட்டாங்க.
‘இல்லைம்மா வேலைக்கு போகணும், இன்னும் பணம் ரெடி பண்ணனும். என்ன பண்ணப் போறேன்னு தெரியலை’ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே கண்ணீர் விட்டுட்டேன். அம்மன் முன்னாடி மட்டும்தான் எனக்குக் கண்ணீர் வரும். அன்னைக்கு அவங்க முன்னாடி எனக்கு அழுகை வந்திடுச்சி.
சொன்னா நம்பமாட்டீங்க.. சின்ன ஸ்பூன்ல இருந்து என் பொண்ணை அவங்க மாமியார் வீட்டில் விடும்வரைக்கும் மொத்தமா அம்மா செலவு பண்ணி அனுப்பி வச்சாங்க. இப்போ சொல்லுங்க, தெய்வம் மனுஷ ரூபம் தான்ங்கிறது உறுதியாகிடுச்சு தானே. நான் வணங்கும் மீனாட்சியம்மனே கருமாரியாக வந்து எனக்கு இந்த உதவியைப் பண்ணிக் கொடுத்தாங்க.
இப்பவும் உனக்குப் பிடிச்சிருந்தா வேலைக்கு போ. இல்லைன்னா இங்கே உனக்கு ஒரு அம்மா வீடு இருக்கு, வந்துடுன்னுசொல்லுவாங்க. இந்தக் காலத்துல இப்படி ஒரு தெய்வத்தை நான் பார்த்ததேயில்லை. சக்தி விகடன் மூலமா அம்மாவுக்கு நான் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்றேன். அம்மாவை நான் மறக்கவே மாட்டேன். அவங்களை மறந்துட்டா அன்னைக்கு நான் இல்லைன்னு அர்த்தம்.
துணை வந்தாள் காமாட்சி
காமாட்சியம்மன் கோயிலுக்கு நவா வர்ண பூஜைக்காக சித்ரா பெளர்ணமி அன்னைக்குப் போகணும்னு நினைச்சிட்டே இருந்தோம். ஆனா, அன்னைக்கு சரியான மழை. நண்பர்கள் எல்லாரும் வந்திருந்தாங்க. எப்படிப் போகிறதுன்னு தெரியாம இருந்தப்ப ஒருத்தர் தெய்வமா வந்து நான் உங்களைக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு எங்களைக் கூட்டிட்டு போயிட்டு முழு பூஜையிலும் கலந்துக்க வச்சு அவரே மீண்டும் வண்டி ஏற்றி வழியனுப்பி வச்சார். வண்டியில் ஏறி அமர்ந்தி திரும்பிப் பார்த்தா அவர் இல்லை. அவர் அந்தக் காமாட்சியைத் தவிர வேற யாரா இருக்க முடியும்?
எனக்கு எதாவது ஒண்ணு வேணும்னு ஆசைப்பட்டா அதை அந்த அம்மன் உடனே நிறைவேத்திடுவா. ஆண்டாள் கிளியுடன் டிவியில் ஒருத்தர் உபன்யாசம் பேசுவார். எனக்கு கிளியோடு ஆண்டாள் இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். நாம கேட்டா அவர் ஆண்டாள் புகைப்படம் அனுப்பி வைப்பார்னுலாம் கேள்விப்பட்டேன். ஆனாலும், அவர்கிட்ட எப்படி அந்தப் புகைப்படத்தை கேட்கிறதுங்கிற தயக்கம் இருந்துச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க.. என்கூட அகிலான்னு ஒரு பொண்ணு நடிக்கிறாங்க. அவங்க அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்குமாம். அவங்க எனக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறதாகச் சொல்லி அகிலா எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாங்க. அதைத் திறந்து பார்த்தால் கையில் கிளியுடன் ஆண்டாள் சிரிக்கிறா. நான் வாங்க விரும்பிய அதே புகைப்படம். இப்பவும் அந்தப் புகைப்படத்தை என் பூஜை அறையில் பத்திரமா வச்சிருக்கேன்.
அதே மாதிரி வாராகி அம்மன் பற்றி எனக்குப் பெருசாத் தெரியாது. என் சொந்தக்காரங்க எல்லாரும் அந்தக் கோயிலுக்குக் கூப்டாங்க. ஆனா, ஷூட்டிங் இருந்ததால என்னால போக முடியல. மறுநாள் என்னைத் தேடி ஒரு பத்திரிக்கை வந்தது. அந்தப் பத்திரிக்கையில் வாராகி அம்மன் படம் போட்டிருந்தது. என்னைத்தேடி அம்மனே வந்த ஓர் உணர்வு. அந்தப் பத்திரிக்கையில் இருக்கிற வாராகி என் பூஜையறையில் அழகா உட்கார்ந்துட்டு இருக்கா!
கடவுளிடம் நான் ரொம்ப உரிமையாத்தான் பேசுவேன். அவங்ககூட ரொம்ப மனசு விட்டு பேசுவேன். மகாபெரியவா எனக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டில் எங்கே பார்த்தாலும் அவர் தெரியும்படி ஃபோட்டோ வச்சிருப்பேன். கருமாரியம்மன் கோயிலுக்கு அடிக்கடி போயிடுவேன். எனக்கு பார்க்கணும்னு தோணினா உடனே கிளம்பிடுவேன். அம்மன் என் மனசுக்கு நெருக்கமான கடவுள்.
உரிமையோடு கேட்பேன்
தினமும் காலை எழுந்தவுடன் பின் வாசலைத் திறந்து நித்ராதேவியை முதலில் வெளியில் அனுப்புவேன். மூன்றரை மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கு வைப்பேன். கோலமெல்லாம் போட்டுட்டு விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாட்டு போட்டுக்கூட பாடுவேன். பிறகு அபிராமி அந்தாதி பாடுவேன். அதுக்குள்ள பால் வந்துடும். காஃபி போட்டுட்டே ‘என்ன காஃபி சாப்டுறியான்’னு அம்மன்கிட்ட பேசுவேன்.
காலை விடியும்போதே டைரி எழுதுவேன். இன்னைக்கு நாள் எப்படின்னு சொல்லி எழுதுவேன். நாள் முடிஞ்ச பிறகு எழுத மாட்டேன். ஆரம்பிக்கும் போதே இதெல்லாம் இன்னைக்கு நடந்ததுன்னு சொல்லி எழுதிடுவேன். ‘டி. ராஜேந்திர் சாருக்கு உடம்பு சரியில்லை. அவரைக் கொஞ்சம் பார்த்துக்கோ.’ அவருக்கு சீக்கிரம் சரி ஆகிடணும்’னு உரிமையா அதிகாரமாக் கேட்டு எழுதுவேன். எல்லாருக்கும் நன்றி சொல்லுவேன், என்கூட வேலை பார்க்கிற எல்லாரும் நல்லாயிருக்கணும் எழுதுவேன். இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அந்த அம்பாள் கிட்ட ஒப்படைச்சிட்டு நான் ஹாயா இருந்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகம் குறையாமல் அதே நேரம் உணர்வுப் பெருக்கோடு பேசிமுடித்தார்.