அ.தி.மு.க சட்ட விதிகளை திருத்த தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு ஹைலைட்ஸ்

HC allows ADMK general committee meeting highlights: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க முடியாது என்றும், பொதுக்குழுவில் அ.தி.மு.க சட்ட விதிகளை திருத்த தடை இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே, அ.தி.மு.க.,வின் ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் நடந்துவருகிறது. இதையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது ஓ.பி.எஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களின் நகல் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்ற மனுதாரரின் அச்சம் குறித்த தீர்மானம் அதில் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர இனியும் புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. என ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: மாஃபாய், மைத்ரேயன்… இ.பி.எஸ் நோக்கி அணிவகுக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் ஆகும். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது பொதுக்குழுவில் ஒரு விவகாரத்தை யாராவது திடீரென எழுப்பமாட்டார்களா என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை சில மணி நேரத்திற்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்தநிலையில், பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை திட்டமிட்டப்படி அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பொதுக்குழு நடத்தவும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை, என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுக்குழுவில் என்ன தீர்மானம் இயற்ற வேண்டும்? என்பதை அக்கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கிற்கு அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கிறேன் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

முன்னதாக இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

இன்று காலை, “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ” என்று ஓ.பி.எஸ் ட்வீட் செய்தார்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். ஆனால் தற்போது இந்த தீர்மானங்கள் மீது ஓபிஎஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் தவறு மேல் தவறு செய்கிறார். ஓ.பி.எஸ் தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். பொதுக்குழுவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஓ.பி.எஸ் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது கூறினார்.

சிறிது நேரத்திலேயே, அதிமுக பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம், என்று தெரிவித்தார்.

தற்போது நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.