தனக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருவதால், தான் தங்கியிருந்த அரசு இல்லத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு காலி செய்தார். அவர் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அசாமில் முகாமிட்டுள்ளனர். 34 எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் சுயேச்சை எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை முறித்துவிட்டு பாஜகவுடன் சிவசேனா கைகோர்க்க வேண்டும் என அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால், இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்க மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநருக்கு 34 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று மாலை கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்தில், “முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதே சமயத்தில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். எனவே சிவசேனா சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சூழலில், மும்பையில் தான் தங்கியிருந்த அரசு இல்லத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று திடீரென காலி செய்துவிட்டு, தனது பூர்வீக இல்லத்துக்கு குடும்பத்தினருடன் குடிப்பெயர்ந்தார். அரசு இல்லத்தை காலி செய்வதற்கு முன்பாக ஒரு வீடியோவை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில், “எனது சொந்த எம்எல்ஏக்களே நான் வேண்டாம் என தெரிவித்திருந்தால், அடுத்த நொடியே முதல்வர் பதவியில் இருந்து வெளியேறி இருப்பேன். எனது ராஜினாமா கடிதம் தயாராக உள்ளது. அடுத்த முதல்வராக வருபவர் சிவசேனாவை சேர்ந்தவராக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்” என அவர் கூறினார். இந்த வீடியோவில் உத்தவ் தாக்கரே சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுக்க பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM