அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளா நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து புறப்பட்டார். முன்னதாக காலையில் அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் வாழ்த்துகளோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு புறப்பட்டார்.
இதனிடையே, ஓபிஎஸ் தனது இல்லத்தில் இன்று காலை கோமாதா பூஜையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவு மாவட்டச் செயலாளருடன் பொதுக்குழு கூட்டத்திற்குப் புறப்படுகிறார். ஈபிஎஸ்ஸின் வாகனம் ஓபிஎஸ் வீட்டைக் கடந்தபோது அவரது ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்குப் பின்னர் ஓபிஎஸ்.,ஸும் புறப்பட்டுச் சென்றார்.
ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உறுதி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையில் இருந்து தாங்கள் விலகுவதாக இல்லை என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ தெரிவித்தனர். ஜெயக்குமார் பேசுகையில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையில் மாற்றமில்லை. நாங்கள் எங்கள் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதெல்லாம் கட்சியினர் கூடி முடிவெடுப்போம் என்று கூறிச் சென்றார்.
வானகரத்தில் போக்குவரத்து நெரிசல்: சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் சூழலில், மதுரவாயல் மேம்பால பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு அரங்குக்குள் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் உத்தரவு: முன்னதாக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.