ஆப்கானிஸ்தான் நாட்டில், 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே நேற்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. மேலும், இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றார். இந்த நிலையில், எதிர்பாராத இத்தகைய சோக சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பற்றிய செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். விலைமதிப்பில்லா உயிர்களை இழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் கடினமான காலங்களில் இந்தியா துணைநிற்கிறது. மேலும் சாத்தியமான அனைத்து பேரிடர் நிவாரண பொருள்களையும் விரைவில் வழங்கவும் தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே உணவுப்பஞ்சம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொண்டுவரும் ஆப்கானிஸ்தான் மக்கள், தற்போது இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.