மேகதாது விவகாரத்தில் மத்திய அமைச்சர் அற்புதமான வாக்குறுதி கொடுத்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து திரும்பிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது…
“மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சட்டமன்றத்தில் இருக்கிற கட்சித் தலைவர்களோடு சென்று சந்தித்தோம். இப்போது மேகதாது என்ற பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது அதை அவரிடத்தில் சொன்னோம். காவிரிக்கும் தமிழ்நாட்டிற்கும் 68-ல் இருந்து பிரச்னை தொடங்கியது. நீண்ட காலம் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது. ஆனால், ஒருநாள் கூட கர்நாடகம் மேகதாது என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. சரி அது முடிந்ததற்கு பிறகு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.
உச்சநீதிமன்றத்திலும் மேகதாது என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்கவே இல்லை. ஆனால் நீதிமன்றம் என்ன சொன்னதென்றால் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை நியமித்து யாருக்கும் எந்த குறையில்லாமல் நாங்கள் கொடுத்திருக்கிற தீர்ப்பை நீங்கள் அமல்படுத்த வேண்டும். அதுதான் உங்களுக்கு தரப்பட்ட அதிகாரம் என்று சொல்லியது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கர்நாடகா மேகதாதுவை பற்றி நாங்கள் பேசுவோம் என்று சொன்னது. அப்படி பேசுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என நாங்கள் திருப்பித் திருப்பி கிட்டத்தட்ட 15 முறை சொன்னோம். உடனே அதை கேட்டுக்கொண்டு சரி என விட்டு விட்டார்கள்.
உச்சநீதிமன்றம், காவிரி ஆணையத்தை நியமித்தது. அதுக்கு அதிகாரங்களை கொடுத்திருக்கிறது. அந்த அதிகார வரம்பில் இருந்து நாங்கள் போக வேண்டுமானால் மறுபடியும் காவிரி ஆணையம் உச் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். எங்களுக்கு இந்த அதிகாரம் வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வழக்கறிஞர்களிடம் ஒப்பினியன் வாங்கி வைத்துக் கொண்டு நாங்கள் காவிரி பிரச்னையில் பேசுவோம் என்று சொல்வது தவறு என்பதை அமைச்சரிடத்தில் நாங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
அதேபோல் மேகதாது அணையை எங்கே கட்டுகிறார்கள் என்றால் கே.ஆர்.சாகர் அணைக்கு கீழே. கே.ஆர்.சாகர் அணையில் இருந்து வழிகிற தண்ணீர் எல்லாம் நமக்கு சொந்தம். அதே மாதிரி கபினியிலிருந்து கீழே வழியிற தண்ணீர் நமக்கு சொந்தம். அதற்கு பிறகு, இயற்கையாக பொழிகிற மழை தமிழ்நாட்டிற்கு சொந்தம். ஆக நமக்கு வருகிற தண்ணீர் தேங்கியிருக்கிற இடத்தில் நாங்கள் அணை கட்டுவோம் என்று சொல்வது அத்துமீறுவதாகாதா, உரிமை மீறலாகாதாஎன்று நாங்கள் திருப்பிக் கேட்டோம். அவர்களிடத்தில் நாங்கள் சொன்னது நியாயம் என்று ஒத்துக் கொண்டார்.
கடைசியாக ஒன்றைச் சொன்னார். இதை விசாரிப்பதற்கு அவர்கள் எடுத்திருக்கிறார்கள், நீங்கள் போய் அதை எதிர்த்து பேசுங்கள் பிறகு பார்க்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி என சொன்னார் நீர்வளத்துறை அமைச்சர். தமிழ்நாட்டினுடைய ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணையும் கட்ட முடியாது என்ற அற்புதமான வாக்குறுதியை கொடுத்தார். அதுபோதும் என வந்திருக்கிறோம்.” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM