சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரம் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் என புகார் எழுந்தது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள நிர்வாகிகளான உஷா, ஹரிஷ், ராஜசேகர் உட்பட மேலும் சிலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஹரிஷை தற்போதுவரை போலீஸார் தேடிவரும் நிலையில் அவருக்கு பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் எனக் கூறப்படுகிறது.