மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனாவில் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி இருக்கிறார். தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக வந்தவண்ணம் இருக்கின்றனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் இப்பிரச்னை குறித்து மக்களிடம் உரையாற்றினார். அதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “சிவசேனாவுடன் சமசரமாக செல்லவேண்டுமானால் உடனே இயற்கைக்கு பொருத்தமற்ற கூட்டணியை கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவசேனா அதிகமான இழப்பை சந்தித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் பயனடைந்துள்ளன. இந்த கட்சிகள்(காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எங்கு பலமாக இருக்கிறதோ அங்கு சிவசேனா பலவீனமாக இருக்கிறது. எனவே சிவசேனாவையும், தொண்டர்களையும் காப்பாற்றவேண்டுமானால் உடனே இயற்கைக்கு மாறான கூட்டணியை உடனே கைவிடவேண்டும்.
மகாராஷ்டிராவின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்படவேண்டியது முக்கியம். சிலர் நாங்கள் பாஜகவுடன் செல்வோம் என்று சொல்கின்றனர். நாங்கள் எப்படி அவ்வாறு செய்வோம். நாங்கள் அவர்களுடன் இருந்து பாதிக்கப்பட்டிருக்கிறோம். பிறகு ஏன் அவர்களுடன் செல்வோம்?” என்று தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டேயிடம் இப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் மட்டுமே இருக்கின்றனர். மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கட்சி தாவல் தடை சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். இதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசும் பணியில் தீவிரமாக இறங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் சிவசேனாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த நெருக்கடியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்பது போன்று பாஜக நடந்து கொள்கிறது. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாநவிஸ் இவ்விவகாரத்தில் ஒதுங்கியே இருக்கிறார். தனது வீட்டில் இருந்த படியே திட்டங்களை வகுத்துக்கொடுத்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.