சென்னை: ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.
அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 2100 பொதுக்குழு மற்றும் செயற்குழு சார்பில் அவைத் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறோம் என்று கூறி மனு ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ” இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டை தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பிறகு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். இதன் பின்னர் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.